தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த், தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜினி. ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது பேட்ச் ஒர்க் நடைபெற்று வருகிறது. ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் ரஜினி. இதில் அவர் மொய்தீன் பாய் என்கிற முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். லால் சலாம் படத்துக்கு அடுத்தபடியாக ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி.
இதையும் படியுங்கள்... நண்பர் ரஜினிக்காக களமிறங்கும் கமல்... லோகேஷ் கனகராஜ் - சூப்பர்ஸ்டார் இணையும் படத்தில் திடீர் டுவிஸ்ட்
இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் ரஜினி. அதுதான் அவர் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், தென்னிந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதர் வெங்கடேஷ்வரன் நடிகர் ரஜினிகாந்தை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசி உள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்திற்கு முக்கிய அழைப்பு ஒன்றையும் விடுத்துள்ளார் வெங்கடேஷ்வரன். அதன்படி பொருளாதார வீழ்ச்சியில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உதவ முன்வருமாறு ரஜினிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையெல்லாம் சுற்றிக்காட்ட இராமயணா டிரையல் என்கிற புதிய திட்டத்தை சுற்றுலாத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக ரஜினிகாந்த் இலங்கைக்கு வருகை தந்து அதனை சுற்றிப்பார்த்தால் அங்கு சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும் எனக்கூறி ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இலங்கையின் இந்த அழைப்பை ஏற்று ரஜினி இலங்கைக்கு செல்வாரா என்ற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் இலங்கை சுற்றுலாவின் இந்திய தூதராக ரஜினிகாந்தை நியமிக்கப் போகிறார்களா என்கிற சர்ச்சையும் இதன் மூலம் எழுந்துள்ளது. இலங்கை துணை தூதருடனான ரஜினியின் இந்த சந்திப்பு தற்போது பேசு பொருள் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... காவி ஆவி நடுவுல தேவி படத்தின் டிரெய்லரை வெளியிட்டு தன் ஸ்டைலில் வாழ்த்திய ரஜினிகாந்த் - வைரலாகும் வீடியோ