
Soubin Shahir impresses in Coolie Movie : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம் தான் கூலி. முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் கூலி படமானது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 14ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியானது. மேலும், தமிழகத்தில் சிறப்பு காட்சியாக 9 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. படம் வெளியானது முதல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது.
இது ரஜினிக்கான படமாக் உருவாக்கப்பட்டிருந்த நிலையில் தனக்கான பணியை சரியாக செய்து ஒன் மேன் ஆர்மியாக படம் முழுவதும் டிராவல் பண்ணியிருக்கிறார் ரஜினிகாந்த். தளபதி படத்தில் தேவாவாக எப்படி மிரட்டிவிட்டிருந்தாரோ அதே போன்று கூலி படத்திலும் நண்பனுக்காக மிரட்டி விட்டிருக்கிறார். ஆனால், வில்லன் ரோலுக்கு நாகர்ஜூனா பொருந்தவில்லை. அவருக்கான வில்லனுக்கு இன்னும் பலம் சேர்த்திருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் தன்னுடைய ரோலுக்கு மீறி நடித்து ரசிகர்களிடையே அன்பையும் பாராட்டையும் பெற்ற சௌபின் ஷாகீருக்கு வில்லன் ரோல் கொடுத்திருக்கலாம்.
சௌபின் ஷாகிர் வரும் ஒவ்வொரு சீனும் ரசிகர்களுக்கு விருந்துதான். எப்படி ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் விநாயகத்தை வில்லன் ரோலுக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தாரோ அதே போன்று சௌபினும் கூலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக கச்சிதமாக பொருந்திருப்பார். அந்தளவிற்கு இந்தப் படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார். அதுமட்டுமின்றி மோனிகா என்ற பாடலில் பூஜா ஹெக்டேவைவிட சௌபினின் டான்ஸ் தான் அதிகமாக பேசப்படுகிறது. அந்தளவிற்கு சௌபின் மோனிகா பெலூச்சி பாடலுக்கு டான்ஸ் ஆடி அசத்தியிருந்தார்.
சமீப காலமாக சௌபின் ஷாகிரின் நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக மஞ்சுமெல் பாய்ஸ் படத்திலும் சௌபின் தனது நடிப்பை வெளிக்காட்டி அசத்தியிருந்தார். ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம், சிறப்பு தோற்றம் என்று எல்லாவற்றிலும் பார்த்து பார்த்து தேர்வு செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வில்லன் ரோலுக்கு இன்னும் கூடுதலாக மெனக்கெட்டிருந்தால் படத்திற்கு கூடுதலாக பலம் சேர்த்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
துறைமுக மாஃபியா டானாக நடித்திருந்த நாகர்ஜூனா துறைமுகத்தில் சட்டவிரோதமாக வியாபாரங்களை செய்து வருகிறார். அவருடன் சௌபின் ஷாகிர் பணியாற்றி வருகிறார். அப்படி சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல் பற்றி அறிந்து கொள்ள காவல்துறை ரகசிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடித்து கொலை செய்வது தான் தயாளனாக நடித்திருக்கும் சௌபின் ஷாகீரின் வேலை. இதேபோல், ரஜினிகாந்தின் (தேவா) நண்பரான ராஜசேகரை (சத்யராஜ்) தயாள் கொலை செய்கிறார். ராஜசேகரின் உடலைப் பார்க்க அவரது நண்பர் தேவா வருகிறார். ஆனால் ராஜசேகரின் மகள் பிரீத்தி (ஸ்ருதி ஹாசன்) தந்தையைப் பார்க்க அனுமதிக்காமல் தேவாவைத் தடுக்கிறார்.
மாஃபியாவால் ராஜசேகர் இறந்ததையும், அவர்களால் பிரீத்திக்கும், அவளது தங்கைக்கும் ஆபத்து இருப்பதையும் அறிந்த தேவா, அவர்களைக் காப்பாற்ற களத்தில் இறங்குகிறார். தனது நண்பரின் குடும்பத்திற்காக எதையும் செய்யத் தயாராகிறார் தேவா. மறுபுறம், சைமனின் சட்டவிரோத வியாபாரங்களும், தயாளின் கொலைகளும் தொடர்கின்றன. சைமன் நிறுவனத்தில் பணிபுரிபவர்களும் தொடர்ச்சியாகக் கொலை செய்யப்படுகின்றனர். இறுதியில் சைமனின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தாரா தேவா?, இல்லையா என்பது தான் கூலி படத்தின் மீதி கதை.
இது போன்று கதைகள் தமிழ் சினிமாவில் வெளியாகியிருந்தாலும், கூலி படத்தை வித்தியாசமான கோணத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்து கூலி படத்தை இயக்கி இன்று வெற்றிகரமாக வெளியிட்டிருக்கிறார். படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதற்கு முக்கிய காரணம், வில்லனுக்கும் சரி, எமோஷனல் காட்சிகளுக்கும் சரி இயக்குநர் கொஞ்சம் கூடுதலாகவே மெனக்கெட்டிருக்கலாம்.
ஆக்ஷன் த்ரில்லர் என்பதால் படத்தில் ஆக்ஷன் காட்சிக்கு எந்த குறையும் இல்லை. ஆனால், செண்டிமெண்ட் என்று பார்க்கும் போது இன்னும் கூடுதலாக பணியாற்றியிருக்கலாம் என்று தோன்றுகிறது. தமிழ் ரசிகர்களுக்கு என்னதான் ஆக்ஷன் காட்சிகள் பிடித்தாலும் கூடுதலாக செண்டிமெண்ட் காட்சிகளையும் விரும்புவார்கள். இதுவரையில் வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தில் ரஜினியின் இமேஜ்ஜை பார்த்து பார்த்து கொஞ்சம் தடுமாறியிருக்கிறார் என்றே சொல்லலாம்.