Soori double action: Hero in Tamil, villain in Telugu!
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கலக்கி வந்தவர் சூரி. ரஜினி, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான சூரியை, விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் வெற்றிமாறன். அதில் குமரேசன் என்கிற போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரமாக வாழ்ந்திருந்தார் சூரி. விடுதலை படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் சூரிக்கு அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்க பட வாய்ப்புகள் குவிந்தன.
24
ஹீரோவாக கலக்கும் சூரி
அந்த வகையில் விடுதலையை தொடர்ந்து அவர் கதையின் நாயகனாக நடித்த கொட்டுக்காளி திரைப்படம் சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு கவனம் ஈர்த்தது. இதைத்தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் திரைப்படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்த சூரி, இதுவரை நாயகனாக நடித்த மூன்று படங்களுமே வெற்றிபெற்றன. அடுத்ததாக அவர் மாமன் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படம் வருகிற மே 16ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
34
சூரியின் அடுத்த படம் மண்டாடி
மாமன் படத்தை தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள மற்றொரு திரைப்படம் மண்டாடி. இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கி உள்ளார். விடுதலை படத்தை தயாரித்த எல்ரெட் குமார் தான் இப்படத்தையும் தயாரித்து உள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியிடப்பட்டு செம வைரல் ஆனது.
பாய்மரப் படகுப் போட்டியை மையமாக வைத்து உருவாகும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது. இதில் தமிழில் ஹீரோவாக நடித்துள்ள சூரி, தெலுங்கில் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழில் வில்லனாக நடித்துள்ள தெலுங்கு நடிகர் சுஹாஸ், தெலுங்கில் ஹீரோவாக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் மூலம் நடிகர் சூரி தெலுங்கில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.