நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லன் யார் என்கிற அப்டேட் வெளியாகி உள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், வஸந்த் ரவி, மிர்ணா, யோகிபாபு, ஷிவ ராஜ்குமார், விநாயகன், தமன்னா, சுனில், ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்திருந்தது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து இருந்தது.
24
நெல்சன் இயக்கத்தில் ரஜினி
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து இருந்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் இப்படம் அமோக வெற்றியை பெற்றது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
கூலி படத்தை முடித்த கையோடு, ஜெயிலர் 2 பட பணிகளை தொடங்க உள்ளார் ரஜினி. அப்படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தைவிட படு பிரம்மாண்டமாக ஜெயிலர் 2 படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார் நெல்சன். இப்படத்திற்கான கதாபாத்திர தேர்வும் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் வில்லனாக மிரட்டிய விநாயகன் கேரக்டர் இறுதியில் கொல்லப்பட்டதால், இரண்டாம் பாகத்தில் அந்த அளவுக்கு டெரர் வில்லனை களமிறக்கும் ஐடியாவில் உள்ளாராம் நெல்சன்.
44
ஜெயிலர் 2வில் எஸ்.ஜே.சூர்யா?
தற்போதைய நிலவரப்படி ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்திராத எஸ்.ஜே.சூர்யா, முதன்முறையாக ஜெயிலர் 2 படத்தின் மூலம் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த காம்போ மட்டும் உறுதியானால் ஜெயிலர் 2 படம் வேறலெவலில் இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.