அமரன் படத்தின் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயன் செம பிசியான ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது எஸ்.கே.23 திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்திற்கு மதராஸி என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருக்கிறார்.
24
சிவகார்த்திகேயனின் மதராஸி
மதராஸி திரைப்படத்தில் வில்லனாக வித்யூத் ஜமால் நடித்துள்ளார். மேலும் விக்ராந்த், பிஜு மேனன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. இன்னும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியின் ஷூட்டிங் மட்டுமே எஞ்சி உள்ளது. தற்போது சிக்கந்தர் பட வேலைகளில் பிசியாக உள்ள ஏ.ஆர்.முருகதாஸ், அப்படத்தின் பணிகள் முடிந்த பின்னர் மதராஸி பட பணிகளை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.
சூர்யாவுக்கு கஜினி, விஜய்க்கு துப்பாக்கி என மைல்கல் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், மதராஸி, சிவகார்த்திகேயன் கெரியரில் முக்கியமான படமாக இருக்கும் என கூறி உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கே இன்னும் நிறைவடையாத நிலையில், மதராஸி படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதன்படி அப்படத்தின் வெளிநாட்டு உரிமையை பர்ஸ் பிலிம் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
44
மதராஸி வெளிநாட்டு உரிமம்
இந்த நிறுவனம் தான் அண்மையில் நடிகர் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் வெளிநாட்டு உரிமையை 75 கோடிக்கு வாங்கியது. இதுவரை எந்த ஒரு தமிழ் படத்தின் உரிமையை இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டதில்லை. தற்போது சிவகார்த்திகேயனின் மதராஸி பட உரிமையையும் பெரும் தொகைக்கு வாங்கி இருக்கிறது பர்ஸ் பிலிம் நிறுவனம். சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை 15 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், மதராஸி படம் அதைவிட கூடுதல் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.