நடிகர் சிவகார்த்திகேயனும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் எஸ்.கே.23. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வஸந்த் நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் சாச்சனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றி உள்ளார்.
24
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்
எஸ்.கே.23 திரைப்படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதையடுத்து சல்மான் கானின் சிக்கந்தர் பட பணிகளில் ஏ.ஆர்.முருகதாஸ் பிசியானதால் எஸ்.கே.23 படம் வெயிட்டிங்கில் உள்ளது. சல்மான் கானின் சிக்கந்தர் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. அப்படம் ரிலீஸ் ஆன பின்னர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.23 திரைப்படத்திற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள உள்ளார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் 40வது பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அப்படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி எஸ்.கே.23 திரைப்படத்திற்கு ‘மதராஸி’ என பெயரிடப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர். மதராஸி திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக மதராஸி உருவாகி வருகிறது.
44
பழைய பட டைட்டில்
நடிகர் சிவகார்த்திகேயன் தன் படங்களுக்கு பழைய பட டைட்டில்களை தேடிப் பிடித்து வைத்து வருவது தொடர்கதை ஆகி வருகிறது. அண்மையில் சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட்ட நிலையில், தற்போது எஸ்.கே.23 படத்துக்காக வைக்கப்பட்டுள்ள மதராஸி என்கிற தலைப்பும் பழைய படத்தில் இருந்து எடுக்கப்பட்டது தான். கடந்த 2006-ம் ஆண்டு அர்ஜுன், வேதிகா நடிப்பில் மதராஸி என்கிற திரைப்படம் வெளியானது. அப்படம் தோல்வி அடைந்தாலும் அந்த டைட்டிலை 19 ஆண்டுகளுக்கு பின் தன் படத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.