கோவாவில் இன்று தொடங்கி இருக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அமரன் படம் தேர்வாகி உள்ள நிலையில், அதற்காக சிவகார்த்திகேயன் கோவா கிளம்பி சென்றுள்ளார்.
சிவகார்த்திகேயன் கெரியரில் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய திரைப்படம் அமரன். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் மறைந்த இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் என்று சொல்வதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு ஜோடியாக இந்து ரெபேகா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார்.
24
அமரன் திரைப்படம்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வந்தது. பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்த அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் தான் சிவகார்த்திகேயனின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாகும். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். அமரன் படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் அப்படத்திற்கு ஏராளமான விருதுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.
34
சர்வதேச திரைப்பட விழாவில் அமரன்
இந்த நிலையில், அமரன் படத்திற்கு முதன்முறையாக சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அப்படம் கோவாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி இருக்கிறது. ஓபன் பீச்சர் பிலிம் என்கிற பிரிவில் இப்படம் திரையிட தேர்வாகி உள்ளது. இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் பெருமிதத்துடன் அறிவித்திருந்த நிலையில், அந்த திரையிடலுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் கோவா கிளம்பி சென்றிருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் அவரை வாழ்த்தி ரசிகர்கள் வழியனுப்பி வைத்தனர்.
அமரன் திரைப்படம் கோல்டன் பீகாக் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இப்படம் அவ்விருதை வெல்லவும் வாய்ப்பு இருப்பதால், சிவகார்த்திகேயன் கோவா கிளம்பி சென்றிருக்கிறார். இந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் இன்று தொடங்கி நவம்பர் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவின் இறுதி நாள் அன்று திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கெளரவிக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.