பாடகி வாணி ஜெயராம் மரணமடைந்தது எப்படி? - பிரேத பரிசோதனை மூலம் வெளிவந்த உண்மை

First Published Feb 5, 2023, 11:04 AM IST

தமிழ் உள்பட 19 மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் மறைவு குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமானார். அவர் தலையில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்ததால் அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதுமட்டுமின்றி வாணி ஜெயராமின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நுங்கம்பாக்கத்தில் உள்ள பாடகி வாணி ஜெயராமின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், பாடகி வாணி ஜெயராமின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் வாணி ஜெயராம் கீழே விழுந்ததில், அவர் தலையில் அடிபட்ட காயமே அவரது மரணத்திற்கு காரணம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. படுக்கையறையில் இருந்த 2 அடி உயரமுள்ள பழமையான மேஜை மீது விழுந்ததில் தான் வாணி ஜெயராமுக்கு தலையில் பலமாக அடிபட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... பிரேத பரிசோதனை முடிந்து வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட வாணி ஜெயராம் உடல்..!

நெற்றியில் உள்ள காயம் மற்றும் மேஜையின் விளிம்பில் உள்ள ரத்தக் கறையை வைத்து பாடகி வாணி ஜெயராம், மேஜையின் மீது விழுந்து தலையில் அடிபட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பது உறுதியாகி உள்ளதாகவும், தடயவியல் நிபுணர் சோதனையிலும் இது உறுதியாகி உள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வாணி ஜெயராம் உயிரிழந்த சமயத்தில் அவரது வீட்டிற்கு வெளிநபர்கள் யாரும் வரவில்லை என்பது சிசிடிவி ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இப்படி தடயவியல் சோதனை, பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததன் மூலம் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... நேற்று வாணி ஜெயராம்... இன்று டி.பி.கஜேந்திரன் - அடுத்தடுத்த மரணங்களால் திரையுலகினர் அதிர்ச்சி

click me!