
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கொண்டாம்பட்டியில் கடந்த 1946-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி பிறந்தார். இவரது தந்தை ஒரு அரிகதை கலைஞர். 2 சகோதரர்கள் மற்றும் 5 சகோதரிகள் என மிகப்பெரிய குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார் எஸ்.பி.பி. இவரது சகோதரிகளில் ஒருவர் தான் எஸ்.பி.சைலஜா, இவரும் பின்னணி பாடகி தான். இவர் தெலுங்கு மொழிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.
பாடகர் எஸ்.பி.பி சாவித்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு பல்லவி என்கிற மகளும், எஸ்.பி.சரண் என்கிற மகனும் உள்ளார். இளம் வயதிலேயே பல்வேறு இசைக் கருவிகளை வாசிக்க தேர்ச்சி பெற்ற எஸ்.பி.பி, ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் வாசிப்பதில் கைதேர்ந்தவராக இருந்து வந்துள்ளார்.
ஆனால், எஸ்.பி.பி தந்தையோ அவரை இஞ்சினியராக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இதன் காரணமாக எஸ்.பி.பி ஆனந்த்பூர் பொரியியல் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்றுள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட காரணத்தினால், அவர் தனது இஞ்சினியரிங் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, பின்னர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்துள்ளார்.
அந்த சமயத்தில் கல்லூரியில் நடந்த பல்வேறு இசைப்போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் வென்றுள்ளார் எஸ்.பி.பி. இதுதவிர மெல்லிசைக் குழு ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். அந்த குழுவில் இளையராஜா மற்றும் அவருடைய சகோதரர்கள் ஆர்.டி.பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோரும் இடம்பெற்று இருந்தனர்.
அவர்களோடு இணைந்து இசை நிகழ்ச்சிகளும், நாடகங்கள் மற்றும் கச்சேரிகளில் பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் எஸ்.பி.பி. அதன்பின் சினிமாவில் பின்னணி பாடகனாக ஆக வேண்டும் என ஆசைப்பட்ட அவர், சென்னையிலேயே தங்கி சினிமாவில் வாய்ப்பு தேடி வந்துள்ளார். கடந்த 1966-ல் தெலுங்கு படம் ஒன்றின் மூலம் பாடகராக எஸ்.பி.பி அறிமுகமாகி இருக்கிறார்.
தமிழில் இவர் முதலில் பாடிய படம் ஹோட்டல் ரம்பா, இதில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எ.ஆர்.ஈஸ்வரியோடு இணைந்து அவர் பாடியிருந்தார். ஆனால் சில காரணங்களால் இந்த படம் வெளியாகவில்லை. இதன்பின்னர் ஜெமினி கணேசன் நடித்த சாந்தி நிலையம் என்கிற படத்தில் இடம்பெற்ற இயற்கை எனும் இளையக்கனி எனும் பாடலை பாடினார்.
ஆனால் இந்த படம் ரிலீசாவதற்கு முன் எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண் படம் ரிலீசானது. அதில் அவர் பாடிய பாடல் தான் ஆயிரம் நிலவே வா. இந்த பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் எஸ்.பி.பி. கடந்த 1960 களில் தமிழ் திரையுலகில் அறிமுகமான எஸ்.பி.பி தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி பாடகராக இருந்து வந்துள்ளார்.
இதுவரை 16 மொழிகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. இதனால் இவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார். பாடகராக மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார் எஸ்.பி.பி. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 45க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
அதோடு டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கி உள்ளார் எஸ்.பி.பி. நடிகர் கமல்ஹாசன் தமிழ்ல நடிச்சு தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட 120-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் தான் டப்பிங் பேசி உள்ளார். கடந்த 1981-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதி பெங்களூருவில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் கன்னட இசையமைப்பாளரான உபேந்திர குமாருக்காக காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரைக்கு ஒரே நாளில் 21 பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார் எஸ்.பி.பி.
அதேபோல் தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும், இந்தியில் 6 மணிநேரத்தில் 16 பாடல்களையும் பாடி சாதனை படைத்துள்ளார். இவ்வாறு என்னற்ற சாதனைகளை படைத்த எஸ்.பி.பி கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவர் இன்று நம்முடன் இல்லை என்பதை மனம் ஏற்க மறுத்தாலும், ஓவ்வொரு நாளும் தனது இனிமையான பாடல்களால் ரசிகர்களுடன் வாழ்த்து வரும் பாடும் நிலா எஸ்.பி.பி அவர்களின் 76 ஆவது பிறந்தநாள் இன்று.
இதையும் படியுங்கள்... Vikram : அண்ணாத்த வசூல் சாதனையை முதல் நாளிலேயே அடிச்சு தூக்கிய விக்ரம்... பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் கமல்