Senior Tamil Cinema Directors Failed Continuously : அனைத்து துறைகளுமே காலத்திற்கு ஏற்ப வளர்ச்சி அடைந்துகொண்டே உள்ளது. அதேபோல் தான் சினிமாவும் காலத்திற்கு ஏற்ப மாறி வருகிறது. சினிமாவில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு வளர்ச்சி அடைந்துள்ளது போல், அதை பார்க்கும் ரசிகர்களின் ரசனையும் மாறி இருக்கிறது. இதனால் தற்போதைய டிரெண்டுக்கு ஏற்ப படங்களை எடுக்கும் இயக்குனர்கள் மட்டும் தான் சோபித்து வருகிறார்கள். அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்த இயக்குனர்கள் தற்போது தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஃபார்ம் அவுட் ஆன ஷங்கர்
ஷங்கர் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிரம்மாண்டம் தான். ஜென்டில்மேன் படத்தில் தொடங்கி காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2 பாய்ண்ட் ஒ, கேம் சேஞ்சர் என படத்துக்கு படம் இவரின் பிரம்மாண்ட மேக்கிங் மிரள வைக்கும். ஆனால் இந்த பிரம்மாண்டமே அவருக்கு தற்போது பின்னடைவாக அமைந்துவிட்டது. அதற்கு எடுத்துக்காட்டு அவரின் கடைசி இரண்டு படங்களான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்ஜர். இந்த இரண்டு படங்களிலும் பிரம்மாண்டம்... பிரம்மாண்டம் என காசைக் கொட்டி எடுத்திருந்தாலும் ரசிகர்களை கவரும் வகையில் திரைக்கதை இல்லாததால், தோல்வியிலும் பிரம்மாண்ட தோல்வியை சந்தித்திருக்கிறார் ஷங்கர்.
இதையும் படியுங்கள்... நிம்மதி பெருமூச்சு விட்ட இயக்குனர் ஷங்கர்.! சொத்து முடக்கம்- EDக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்
சொதப்பும் ஏ.ஆர்.முருகதாஸ்
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஆளு பார்க்க ஒல்லியாக இருந்தாலும் இவரது படங்கள் கில்லி போல் நின்று பேசும். அஜித்தின் தீனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான முருகதாஸ், பின்னர் விஜயகாந்தை வைத்து ரமணா என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்தார். பின்னர் சூர்யாவை வைத்து இவர் இயக்கிய கஜினி தமிழில் சக்கைப்போடு போட்டது மட்டுமின்றி இந்தியிலும் முருகதாஸை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து விஜய்யை வைத்து தொடர்ச்சியாக துப்பாக்கி, கத்தி, சர்கார் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டின் அடையாளமாக திகழ்ந்து வந்தார். பின்னர் மகேஷ் பாபு வைத்து இவர் இயக்கிய ஸ்பைடர், ரஜினியின் தர்பார் ஆகிய படங்களின் தோல்வி முருகதாஸுக்கு பின்னடைவை கொடுத்தது. அண்மையில் சிக்கந்தர் என்கிற பாலிவுட் படம் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முருகதாஸ், அதிலும் தோல்வியை தழுவி அவுட்டேட்டட் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார்.
பிளாப் இயக்குனரான சுசீந்திரன்
மனதுக்கு நெருக்கமான படங்களைக் கொடுக்கக் கூடிய இயக்குனர்களில் சுசீந்திரனும் ஒருவர். வெண்ணிலா கபடிக் குழு படம் மூலம் அறிமுகமான சுசீந்திரன். அடுத்தடுத்து நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீர் என பல ஹிட் படங்களைக் கொடுத்திருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளாக அவருக்கு ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக இவர் இயக்கும் படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றன. அதிலும் இவரது சமீபத்திய படங்கள் கிரிஞ்சாக இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
பாலாவை துரத்தும் தோல்வி
தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்குபவர் பாலா. சேது என்கிற தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் பாலா. இதையடுத்து நந்தா, பிதாமகன், நான் கடவுள் என பாலா இயக்கிய ஒவ்வொரு படமும் மாஸ்டர் பீஸ் ரகம். இதன்பின்னர் பாலாவின் படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்தித்தன. குறிப்பாக பரதேசி, அவன் இவன், நாச்சியார், தாரை தப்பட்டை என தொடர் தோல்விகளை சந்தித்த பாலாவுக்கு அண்மையில் ரிலீஸ் ஆன வணங்கான் படமும் அதே ரிசல்டை தான் கொடுத்தது. பழைய பார்முலாவிலேயே படம் எடுப்பதும் இவரின் பின்னடைவுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பாலாவின் சினிமா வாழ்க்கையில் மோசமான வசூல்; வணங்கான் பட மொத்த கலெக்ஷனே இவ்வளவு தானா?