தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக பல்வேறு தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள இவர், கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்த காதலுக்கு மரியாதை படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷாலினி.
இதையடுத்து கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் என தமிழில் ஷாலினி நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகின. இவர் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஜித்தை திருமணம் செய்த பின் சினிமாவில் இருந்து ஒரே அடியாக விலகிவிட்டார் ஷாலினி. தற்போது இவருக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.
நடிகர் அஜித் பப்ளிசிட்டியை விரும்பாதவர் என்பதால் அவர் சமூக வலைதளங்கள் எதையும் பயன்படுத்துவதில்லை, அதே ஃபார்முலாவை ஷாலினியும் பின்பற்றி வந்தார். இந்நிலையில், தற்போது முதன்முறையாக நடிகை ஷாலினி சோசியல் மீடியா பக்கம் காலடி எடுத்து வைத்துள்ளார். அதன்படி இன்ஸ்டாகிராமில் ஷாலினி எண்ட்ரி கொடுத்துள்ள தகவல் அறிந்த ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த தகவல் வெளியாகி ஒரு நாள் கூட ஆகாத நிலையில், தற்போது வரை நடிகை ஷாலினியை 34 ஆயிரம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.