“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக நடித்ததன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான விஜே சித்ரா டிசம்பர் 9ம் தேதி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார். இதனிடையே ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்ய ஸ்ரீ சித்ராவின் குடும்பத்தினர், மாமனார், மாமியர், கணவர் ஹேமந்த், சக நடிகர், நடிகைகள், நண்பர்கள், ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், சித்துவின் உதவியாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
கிட்டதட்ட 15 பேரிடம் நடத்தப்பட்ட 16 பக்க விசாரணை அறிக்கையை கடந்த மாதம் கோட்டாட்சியர் திவ்ய ஸ்ரீ காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இதனிடையே சித்ராவின் தாயார் தனது மகளின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமென முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைவிட அதிர்ச்சியான செய்தியாக சித்ராவின் ஹேண்ட்பேக்கில் இருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா நிரப்பப்பட்ட சிகரெட்டை போலீசார் கைப்பற்றியதாகவும், சித்துவிற்கு அதை சப்ளை செய்தது யார் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் ஒட்டுமொத்த சின்னத்திரையும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
தற்போது சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கை நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வரும் நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே இவருடைய ஜாமீன் மனு நிராகரிக்க பட்ட நிலையில், இன்று விசாரணைக்கு வந்த போது ஹேம்நாத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.
ஹேம்நாத் கைது செய்யப்பட்டு 60 நாட்கள் ஆகியும், குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் தற்போது ஜாமீன் வழங்கியுள்ளது நீதிமன்றம்.