
விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 69 படத்தின் டைட்டில் மற்றும் கதை குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது விஜய்யின் கடைசி படம் என்பதும், விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று தான். விஜய் அரசியலில் களமிறங்குவதற்கு முன்னரே தனது படங்களில் அரசியல் குறித்த காட்சிகளில் நடித்துள்ளார். உதாரணத்திற்கு கத்தி, சர்கார், தலைவா என்று பல படங்களை சொல்லலாம்.
சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றி கொடுத்த படம் தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம் (The Greatest of All Time - கோட்) படத்திலும் ஒரு பாடலில் அரசியல் தொடர்பான கருத்துக்கள் இடம் பெற்றிருந்தது. இந்தப் படம் திரைக்கு வருவதற்கு முன்னரே விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வரிசையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் புதிதாக உதயமாகியிருக்கிறது. இந்த கட்சியின் முதல் அரசியல் மாநாடு வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இதற்கான பூமி பூஜை இன்று நடை பெற்றுள்ளது. அதோடு கோட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 69ஆவது படமான தளபதி 69 படத்தின் பூஜையும் இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. விஜய்யின் அரசியல் பயணம் தொடர உள்ள நிலையில் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்த நிலையில் தனது கடைசி படமாக தளபதி 69 படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தை அஜித்தின் மாஸான இயக்குநர் ஹெச் வினோத் இயக்குகிறார். இதற்கு முன் அஜித் மற்றும் வினோத் காம்போவில் வலிமை, நேர்கொண்ட பார்வை மற்றும் துணிவு ஆகிய படங்கள் திரைக்கு வந்து ஹிட் கொடுத்துவிட்டன. ஆதலால், தனது கடைசி படத்தையும் ஹிட் கொடுத்து முடிக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் ஹெச் வினோத்திற்கு விஜய் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்தியே இந்தப் படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கோட் படத்தில் பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா கேம்பயினை தான் தொறக்கட்டுமா, மைக்க கையில் எடுக்கட்டுமா என்ற பாடலில் தனது அரசியலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் வகையில் அரசியல் குறித்த வரிகள் இடம் பெற்றிருந்தது.
தளபதி 69 படமும், விஜய்யின் அரசியல் மாநாடும் அடுத்தடுத்து நடைபெற இருக்கும் நிலையில் இந்தப் படத்திலும் அரசியல் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் கண்டிப்பாக இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு ஏன், விஜய்யின் கட்சி கொடியை கூட பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதற்கு முன்னதாக சர்கார் படத்தில் அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டு கடைசியில் வெற்றியும் பெற்றார். அதே போன்று தான் தளபதி 69 படமும் அரசியல் கதையாக இருக்கும்.
அரசியல் கதையை மையப்படுத்திய தளபதி 69 படத்திற்கு தனது அரசியல் பிரவேசத்திற்கு ஒரு ஆதாயமாக இருக்கும் வகையிலான ஒரு டைட்டிலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று நேர்காணலில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தெரியாது என்று பதில் அளித்திருந்த விஜய் இன்று அரசியலுக்கு வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே இந்தப் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரைன், பிரியாமணி, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், டாப் குக்கு டூப் குக்கு புகழ் மோனிஷா ஆகியோர் பலர் நடிக்கின்றனர். மேலும், கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
தளபதி 69 படத்திற்கு விஜய்க்கு ரூ.275 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மற்ற நடிகர், நடிகைகளின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகவில்லை. ஏற்கனவே பட போஸ்டர் வெளியான போதே அதில் ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் விரைவில் வருவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்தப் போஸ்டரின் படி, விஜய் ஜனநாயகத்தை காக்க தீப்பந்தம் ஏந்தி வருவது போல தெரிகிறது. இதன் மூலமாக தளபதி 69 படத்தின் டைட்டில் ஜனநாயகம் என்று கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நாளை 5 ஆம் தேதி முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. கேரளாவின் பயனூர் பகுதியைச் சுற்றிலும் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவருக்கும் இடையிலான பாடல் காட்சிகள் அங்கு படமாக்கப்பட இருக்கிறது. இதற்கு சேகர் மாஸ்டர் நடனம் அமைத்துக் கொடுக்கிறார். இதற்காக பயனூரில் பிரத்யேகமாக செட் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தளபதி 69 படம் வரும் 2025 ஆம் ஆண்டு திரைக்கு வர இருக்கிறது.