தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர நடிகர், ஹீரோ என படிப்படியாக வெற்றி கண்டவர் சத்யராஜ். இந்திய அளவில் பேசப்பட்ட பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் கூட சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது.
சத்யராஜ் மகன் சிபிராஜ் கோலிவுட்டில் நாயகனாக நடித்து வருகிறார். மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். அதுமட்டுமின்றி சமூக சிந்தனை கொண்ட திவ்யா பல்வேறு விஷயங்களாகவும் குரல் கொடுத்து வருகிறார். அப்பா சத்யராஜைப் போலவே மனதில் பட்டதை தைரியமாக பேசக்கூடியவர்.
குறிப்பாக தேர்வுக்கு எதிராக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதைக் குறிப்பிடலாம். கொரோனா காலத்தில் தவித்த ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக மகிழ்மதி என்ற இயக்கத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
வர உள்ள சட்டமன்ற தேர்தலில் நடிகர் சத்யராஜ் திமுகவிற்காக பிரச்சாரம் செய்ய உள்ளதாக செய்திகள் தீயாய் பரவி வந்தது. அதேபோல் அவருடைய மகள் திவ்யாவும் அரசியல் களமிறங்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் சத்யராஜ், என் பிள்ளைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட தந்தை நான். என் மகளை தைரியமாக வளர்த்திருக்கிறேன். திவ்யாவின் அரசியல் பாதையிலும் நல்ல நண்பனாகவும், தகப்பனாகவும் பக்க பலமாக நிற்பேன். நிச்சயம் என் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் திவ்யா சத்யராஜ், “அப்பா என் உயிர் தோழன். என் அரசியல் பாதையில் என்னுடன் கைகோர்த்து நிற்பார். ஆனால் சொந்த வளர்ச்சிக்காக ஒரு போதும் அப்பாவின் புகழை உபயோகிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
திவ்யா சத்யராஜ் அரசியலில் குதிப்பேன் என்று மட்டுமே கூறியுள்ளார். எந்த கட்சி என்பதை வெளியில் சொல்லவில்லை. ஆனால் அவர் திமுகவில் இணைய உள்ளதாகவும், மகளுக்காக அப்பா சத்யராஜ் திமுக தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்வார் என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.