
Sanjay Dutt Fan Nisha Patel Donates Rs 72 crores to Him : சினிமாவை விட நடிகரை அதிகம் நேசித்த ரசிகை ஒருவர் தன்னுடைய எல்லா சொத்துக்களையும் அவரது பெயருக்கு எழுதி வைத்துவிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாலிவுட்டில் மட்டுமின்றி கோலிவுட்டிலும் அதிகம் பிரபலமானவர் தான் நடிகர் சஞ்சய் தத். இவர் விஜய் நடிப்பில் வந்த லியோ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தான் தத். அதிலும் இவருக்கு பெண் ரசிகைகள் தான் ஏராளம். இப்போதும் சஞ்சய் தத் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளார். 135க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சஞ்சய் தத், தனது ரசிகர்களின் அன்பைப் பெற்றுள்ளார்.
சஞ்சய் தத்தின் மீது தீராத அன்பு கொண்ட பெண் ரசிகை ஒருவரின் சோகக் கதையும், அதே நேரத்தில் அதிர்ச்சியூட்டும் கதையும் வெளிவந்துள்ளது. சஞ்சய் தத் தான் தனது உயிர் என்று நம்பிய இந்தப் பெண், அவரையே திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்தார். ஆனால், அவரது காதல் சஞ்சய் தத்திற்குத் தெரியவே இல்லை. இறுதியில், இந்தப் பெண் ரசிகை தனது ரூ.72 கோடி மதிப்புள்ள சொத்தை சஞ்சய் தத்திற்கு எழுதி வைத்துவிட்டு உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தப் பெண் ரசிகையின் பெயர் நிஷா படேல். சஞ்சய் தத்தின் முதல் படத்திலிருந்து அவரது அனைத்துப் படங்களையும் பார்த்து அவரது தீவிர ரசிகையே மாறியிருக்கிறார். சஞ்சய் தத் தான் தனது எல்லாமே என்று நினைத்து வாழ்ந்தார். நிஷா படேலின் இதயத்திலும், மனதிலும் சஞ்சய் தத்திற்கு மட்டுமே இடம் இருந்தது. ஆனால், அவரது காதல் வெளியே தெரியவில்லை. சஞ்சய் தத்திற்கும் தெரியவில்லை.
2018 ஆம் ஆண்டில், மும்பை போலீசார் சஞ்சய் தத்திற்கு போன் செய்தனர். போலீசார் சொன்னதை கேட்டு சஞ்சய் தத் அதிர்ச்சியடைந்தார். காரணம், நிஷா படேல் என்ற உங்கள் ரசிகை, தனது சொத்துக்கள் அனைத்தையும் உங்கள் பெயருக்கு எழுதி வைத்துள்ளார் என்று தெரிவித்தனர். நிஷா படேல் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். தனியாக வீட்டில் வசித்து வந்த நிஷா படேலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வீட்டை சோதனையிட்டபோது, உயில் உள்ளிட்ட பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த ஆவணங்களில், தனது சொத்துக்கள், வங்கிக் கணக்கில் உள்ள பணம் அனைத்தையும் சஞ்சய் தத்திற்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ஆவணங்களை போலீசார் கைப்பற்றி சஞ்சய் தத்திற்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். தன்னை விட சஞ்சய் தத்தை அதிகமாக நேசித்த அந்த ரசிகை, தனது ரூ.72 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சஞ்சய் தத்திற்கு எழுதி வைத்துவிட்டு இறந்து போனது செய்தி அவரை அதிகளவில் பாதித்தது.
போலீசார் சொன்னதிலிருந்து மீண்டு வந்த சஞ்சய் தத், ஒரு முக்கிய முடிவை எடுத்தார். தனது வழக்கறிஞர் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டார். நிஷா படேல் தனது ரசிகை என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாகவும், ஆனால் அவர் இறந்து போனது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார். நிஷா படேலுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை, அவரை சந்தித்ததில்லை, அவரைத் தெரியாது என்றும், எனவே அவரது சொத்துக்களை ஏற்க மாட்டேன் என்றும் அறிக்கையில் தெரிவித்தார். இந்தச் சம்பவம் சஞ்சய் தத்தை மிகவும் பாதித்தது. இந்தச் சம்பவத்தை யாரிடமும் பேசாமல் ரகசியமாக வைத்திருந்தார். இப்போது இந்தத் தகவல் வெளியே வந்துள்ளது.
இது போன்ற சம்பவம் இதுவரையில் எந்த நடிகருக்கும் நடந்ததில்லை. இனியும் நடக்க போவதும் இல்லை. ஆனால், நடிகர், நடிககளை கடவுளாக கொண்டாடுவது தமிழ் சினிமா மட்டுமின்றி எல்லா சினிமாவிலும் நடைபெற்று வருகிறது. ஆம், நடிகர், நடிகைகளுக்கு சிலை வைத்து கோயில் கட்டி வழிபாடு செய்து வரும் ரசிகர்கள் பற்றிய செய்தி வெளியாகும் வரும் நிலையில் இப்படி தன்னுடைய 72 கோடி சொத்துக்களை நடிகருக்கு எழுதி வைத்துவிட்டு ரசிகை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.