மச்சக்காரன்பா... மோகன்லாலின் ஒரே ஒரு ஃபோன் கால்; ‘பல்டி’ மூலம் மலையாளத்தில் அறிமுகமான சாய் அபயங்கர்!

Published : Jul 05, 2025, 09:32 AM IST

தமிழ் சினிமாவில் பிசியாக பணியாற்றி வரும் சாய் அபயங்கர், பல்டி படம் மூலம் மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார்.

PREV
14
Sai Abhyankkar Malayalam Debut

‘கச்சி சேரா’, ‘ஆசை கூட’, ‘சித்திர பூத்திரி’ போன்ற பாடல்களால் பிரபலமானவர் சாய் அபயங்கர். பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் மகனான இவர் சுயாதீன இசைப் பாடல்களால் இளசுகள் மத்தியில் டிரெண்ட் ஆனார். இவர் இசையமைத்து பாடிய சுயாதீன இசைப் பாடல்கள் யூடியூப்பில் 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன. இதன்காரணமாக சாய் அபயங்கருக்கு படிப்படியாக சினிமாவிலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் லோகேஷ் கனகராஜின் ‘பென்ஸ்’ படத்தில் முதன்முதலில் இசையமைப்பாளராக கமிட்டானார் சாய் அபயங்கர்.

24
சாய் அபயங்கர் கைவசம் இத்தனை படங்களா?

இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படத்தில் ஒப்பந்தமானார். பின்னர் படிப்படியாக சிம்புவின் ‘எஸ்டிஆர் 49’, பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ போன்ற படங்களுக்கும் இசையமைக்க ஒப்பந்தமானார். இதுதவிர அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் பிரம்மாண்டமான பான் இந்தியா திரைப்படத்திற்கும் சாய் தான் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டதும் யார்ரா இந்த பையன் என இந்திய திரையுலகமே வலைவீசி தேட ஆரம்பித்தது. இவருக்கு இப்படி அடுத்தடுத்து பிரம்மாண்ட பட வாய்ப்புகள் கிடைத்து வருவதற்கு நெப்போடிசம் தான் காரணம் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

34
மலையாளத்தில் அறிமுகமான சாய் அபயங்கர்

இந்த நிலையில் சாய் அபயங்கருக்கு அடுத்ததாக ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி அவர் மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஷான் நிகம் நடிக்கும் ‘பல்டி’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார் சாய். மோகன்லால் தொலைபேசியில் அழைத்து சாயை மலையாள சினிமாவிற்கு அழைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ‘பல்டி ஓணம்’ என்று முடியும் வீடியோவில் சாயின் பெயர் எழுதப்பட்ட ஜெர்சியுடன் மோகன்லால் நிற்கிறார். சாயின் இசையமைப்பில் வெளியாக உள்ள முதல் திரைப்படமாக ‘பல்டி’ இருக்கும்.

44
பல்டி திரைப்படம்

இசை மற்றும் அதிரடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக ‘பல்டி’ உருவாகிறது. எஸ்.டி.கே. ஃப்ரேம்ஸ், பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். ‘மகேஷிண்டே பிரதிகாரம்’, ‘மாயாநதி’ போன்ற படங்களை தயாரித்த சந்தோஷ் டி. குருவிளாவும் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். புதுமுக இயக்குனர் உன்னி சிவலிங்கம் இயக்குகிறார். ஷான் நிகமின் 25வது படமான ‘பல்டி’யில் சாய் அபயங்கர் இசையமைப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் படம் ‘பல்டி’. கேரளா-தமிழ்நாடு எல்லை கிராமத்தை பின்னணியாகக் கொண்ட படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் ஷான் நிகமுடன் மலையாளம் மற்றும் தமிழ் முன்னணி நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories