நயன்தாரா - விக்னேஷ் சிவன் கூட்டணியில் கடந்த மாதம் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.66 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. இப்படத்தை இவர்கள் இருவரும் இணைந்து தங்களது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தனர். இப்படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் உள்ள இந்த காதல் ஜோடி தற்போது திருமணத்திற்கு தயாராகி வருகிறது.
இவர்கள் இருவரும் வருகிற ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளனர். முதலில் இந்த ஜோடி திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தனர். இதற்காக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் அனுமதி கோரி இருந்தனர். ஆனால் இந்த திருமணத்தில் இருவீட்டார் தரப்பில் இருந்தும் 150 பேருக்கு மேல் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்டதால் அதற்கு தேவஸ்தான அதிகாரிகள் அனுமதி தர மறுத்திவிட்டார்களாம்.
திருப்பதியில் அனுமதி மறுக்கப்பட்டதால் தற்போது திருமணம் நடைபெறும் இடத்தை மாற்றி உள்ளனர். அதன்படி நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் வருகிற ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.