தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்கள் என முத்திரை குத்தப்பட்டு பல்வேறு படங்களில் அவர்கள் தங்களின் டெரரான நடிப்பால் அசத்தி இருந்தாலும், நிலையான வில்லி நடிகை என சொல்லும் அளவுக்கு பெரியளவில் யாரும் இல்லை. இருந்தாலும், முன்னணி நடிகைகள் சிலர் வில்லி கேரக்டரில் நடித்து அசத்தி இருக்கிறார்கள். அப்படி நெகடிவ் ரோலில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது படையப்பா தான். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய அப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லியாக நடித்து மிரட்டி இருப்பார் ரம்யா கிருஷ்ணன். அவர் நடித்த நீலாம்பரி என்கிற கதாபாத்திரத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அப்படம் வெற்றியடைய அவரின் கதாபாத்திரமும் முக்கிய காரணமாக அமைந்தது.
ரீமா சென்
மின்னலே படத்தில் ரொமாண்டிக் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ரீமா சென்-ஐ யாரும் எதிர்பார்க்காத விதமாக வில்லியாக நடிக்க வைத்து சர்ப்ரைஸ் கொடுத்தது சிம்பு. அவர் முதன்முதலில் இயக்கிய வல்லவன் படத்தில் சிம்புவின் பள்ளிப்பருவ காதலியாக கீதா கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரீமா சென், பின்னர் வில்லியாக மாறி நடிப்பில் அதகளம் செய்திருப்பார்.
ஜோதிகா
துறுதுறு ஹீரோயினாக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த ஜோதிகாவை வில்லியாக மாற்றியது இயக்குனர் கவுதம் மேனன் தான். அவர் இயக்கத்தில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் முதன்முதலில் வில்லியாக நடித்திருந்தார். ஆனால் அவரின் இந்த வில்லி கதபாத்திரம் அப்படத்திற்கு மைனஸ் ஆக அமைந்தது.
ஸ்ரேயா ரெட்டி
தருண் கோபி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான திமிரு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதற்கு அப்படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி தான் முக்கிய காரணம் என சொல்லலாம். கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஸ்ரேயா ரெட்டி விஷாலை கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி டார்ச்சர் செய்யும் சீனில் வேறலெவலில் நடித்திருப்பார். இப்படத்துக்கு பின் அவருக்கு அந்த மாதிரி மாஸான வேடங்கள் எதுவும் அமையவில்லை.
மும்தாஜ்
நடிகை மும்தாஜ் என்றாலே கவர்ச்சி வேடங்கள் தான் இருந்த காலகட்டத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ராஜாதி ராஜா திரைப்படத்தில் வில்லியாக நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருந்தார் மும்தாஜ். இருப்பினும் இப்படம் வர்த்தக ரீதியாக தோல்வியை தழுவியது.
மனிஷா கொய்ராலா
சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாப்பிள்ளை. இப்படம் மூலம் தான் நடிகை ஹன்சிகா ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தில் நடிகை ஹன்சிகாவின் அம்மாவாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். அதுவரை தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த அவர், முதன்முறையாக அப்படத்தில் வில்லி வேடம் ஏற்று நடித்திருந்தார்.