
Pushpa 2 Actor Allu Arjun Released From Jail : புஷ்பா 2 படம் ரிலீசான போது ஹைதராபாத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அதிகாலை 4 மணி ஷோ போடப்பட்டது. அதற்கு நடிகர் அல்லு அர்ஜூன் வருகை தந்தார். புஷ்பா 2 மற்றும் அல்லு அர்ஜூன் பார்க்க ஏராளமான ரசிகர்கள் தியேட்டர் முன்பு கூடினர். இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அதில், 35 வயது நிரம்பிய பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் அல்லு அர்ஜூன், சந்தியா திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அல்லு அர்ஜூனின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் தான் நேற்று அல்லு அர்ஜூன் வீட்டிற்கு சென்ற போலீசார் அல்லு அர்ஜூன் மட்டுமின்றி அவருடன் திரையரங்கு உரிமையாளர், பாதுகாப்பு அதிகாரிகளையும் கைது செய்து ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அங்கு அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தெலுங்கானாவில் உள்ள சஞ்சல்குடா பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் கோரி தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கியது.
எனினும், அவருக்கான ஜாமீன் ஆவணங்கள் கிடைக்காத நிலையில் சஞ்சல்குடா சிறையில் அல்லு அர்ஜூன் அடைக்கப்பட்டார். ஒருநாள் இரவு முழுவதும் சிறைவாசம் அனுபவித்த அல்லு அர்ஜூன் சற்று நேரத்திற்கு முன்னதாக சிறையிலிருந்து வெளியில் வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
ஆனால், அல்லு அர்ஜூன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உரிய ஆவணங்கள் கிடைத்த போதிலும் போலீசார் அல்லு அர்ஜூனை விடுவிக்கவில்லை. இதற்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். இது சட்ட விரோத காவல். சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.
ரேவதி என்ற பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்குவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த 5ஆம் தேதி திரைக்கு வந்த புஷ்பா 2 படம் வசூல் ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
ரிலீஸுக்கு முன்னதாகவே ரூ.1085 கோடி வசூல் குவித்த புஷ்பா 2 படம் வெளியாகி 9 நாட்கள் கடந்த நிலையில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.