கன்னட திரையுலகில் பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மகன் மனோரஞ்சன் ரவிச்சந்திரன் நடிக்கும் படத்திற்கு 2016 ஆம் ஆண்டே ’டியூட்’ என்று பெயரிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை எஸ். கார்த்தி இயக்குகிறார். கன்னட ’டியூட்’ படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்திற்கும் ’டியூட்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதும், கன்னட திரைப்படக்குழு அதிர்ச்சி அடைந்தது. இயக்குநர் எஸ். கார்த்தி, "நாங்கள் 2016-லேயே ’டியூட்’ தலைப்பைப் பதிவு செய்து, படப்பிடிப்பைத் தொடங்கினோம். இப்போது தமிழில் இதே பெயரில் படம் வருவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் எங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. இது குழப்பத்தை ஏற்படுத்தும், எங்கள் படத்தைப் பாதிக்கும்" என்று கூறியுள்ளார்.
மேலும், "இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்போம். தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கிறோம்" என்றும் அவர் கூறியுள்ளார். இந்தத் தலைப்புக்கான உரிமை தங்களிடம் இருப்பதால், வேறு யாரும் இதைப் பயன்படுத்துவது விதிமீறல் என்று அவர் வாதிடுகிறார்.