நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகள் காணாமல் போனதாக சென்னை தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்திருந்தார். அவர் அளித்திருந்த புகாரில், அந்த நகைகளை கடந்த 2019-ம் ஆண்டு தன் தங்கையின் திருமணத்தின் போது கடைசியாக பயண்படுத்தியதாகவும், அதன்பின் லாக்கரில் வைக்கப்பட்ட அந்த நகைகள் காணாமல் போனதை கடந்த மாதம் தான் கண்டுபிடித்ததாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
மொத்தம் 60 சவரன் தங்க நகைகள், வைர நகைகள், தங்கக்கட்டிகள் என மொத்தம் ரூ.3 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமாகி உள்ளதாகவும், தன் வீட்டில் பணியாற்றிய ஈஸ்வரி உள்பட 3 பேர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் ஐஸ்வர்யா தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
அப்போது ஐஸ்வர்யாவின் வீட்டில் பணியாற்றிவிட்டு கடந்த 6 மாதத்திற்கு முன் வேலையை விட்டு நின்ற 40 வயதான ஈஸ்வரி என்கிற பணிப்பெண்ணின் வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணபரிவர்த்தனை நடந்ததை கண்டுபிடித்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதையும் படியுங்கள்... இந்த மனசு யாருக்கு வரும்... தசரா படக்குழுவுக்கு ஒரு கிலோ தங்கத்தை பரிசாக வாரி வழங்கிய கீர்த்தி சுரேஷ்
ஈஸ்வரி மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த ஐஸ்வர்யா, அவருக்கு தன் வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வந்து செல்ல அனுமதி கொடுத்திருக்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஈஸ்வரி, கடந்த 2019-ம் ஆண்டு முதல் லாக்கரில் இருந்த நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக அபேஸ் செய்து வந்திருக்கிறார். ஈஸ்வரிக்கு 3 மகள்கள் உள்ளதால், அவர்களின் திருமணத்திற்காக திருடிய நகைகளின் மூலம் சேமித்து வந்ததோடு, சோழிங்கநல்லூரில் ரூ.95 லட்சத்துக்கு நிலம் ஒன்றை வாங்கி உள்ளார்.
இவ்வளவு பெரிய தொகைக்கு நிலம் வாங்கினால் சந்தேகம் வந்துவிடும் என்பதற்காக, வங்கியில் கடன் வாங்கி அதன்மூலம் நிலம் வாங்கியுள்ள ஈஸ்வரி, அந்த கடனை இரண்டே வருடத்தில் அடைத்து இருக்கிறார். ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து திருடிய நகைகளை எல்லாம் சென்னை மைலாப்பூரில் உள்ள தனியார் நகைக்கடையில் ஈஸ்வரி விற்பனை செய்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இதையடுத்து நகைகளை விற்று அதன்மூலம் ஈஸ்வரி வாங்கிய சொத்துக்கான ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஈஸ்வரியிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளர்களிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள் மற்றும் வெள்ளிக்கட்டிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட ஈஸ்வரிக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் வெங்கடேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்து, அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... மீண்டும் தமிழ் படங்களில் பிஸியான நடிகை விருமாண்டி அன்னலட்சுமி! படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்!