ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நாயகனாக நடித்திருந்த இந்த படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையையும், நட்பையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸ் ஆன இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இதற்கு அடுத்தபடியாக ஆஸ்கர் வெல்லவும் ஆர்.ஆர்.ஆர். படத்துக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதற்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ள ஆர்.ஆர்.ஆர் படக்குழு, அங்கு இப்படத்துக்கான பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறது. ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் 15 பிரிவுகளில் போட்டியிடுகிறது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்.
இந்நிலையில், 95-வது ஆஸ்கர் விருது விழாவுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. சரியாக இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்த நாமினேஷன் பட்டியல் வெளியாக உள்ளது. இதில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த பாடல், சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த வி எஃப் எக்ஸ், சிறந்த ஒலி என 6 பிரிவுகளில் தேர்வாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அது சாத்தியமாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படியுங்கள்.... சிம்பு வீட்டுக்கு வந்த புது வாரிசு... மீண்டும் தாத்தா ஆன குஷியில் டி.ராஜேந்தர்