அஜித்துக்கு முன் பத்ம பூஷன் விருது வென்ற தமிழ் நடிகர்கள் இத்தனை பேரா?
கலைத் துறையில் சிறந்த பங்களிப்பை கொடுத்ததற்காக நடிகர் அஜித்குமாருக்கு இந்த ஆண்டு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூஷன் விருதை அஜித் வென்றிருப்பதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பத்ம பூஷன் விருது வென்றதால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ள நடிகர் அஜித், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
24
Ajithkumar
அதில், இந்த நாளைக் காண என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக குறிப்பிட்டிருந்த அஜித், தான் செய்யும் எல்லாவற்றிலும் அவரது வழிகாட்டுதல் இருக்கிறது என்பதில் அவர் பெருமை கொள்வார் என தெரிவித்தார். மேலும் தன் தாயின் நிபந்தனையற்ற அன்புக்கும், அவரது தியாகங்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார். கடந்த 25 ஆண்டுகளில் தனது அனைத்து சந்தோஷங்களிலும் வெற்றிகளிலும் துணையாக இருந்த தன் மனைவியும், தோழியுமான ஷாலினி தான் தனது பக்கபலம் என்று குறிப்பிட்டுள்ள அவர், தன் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் தான் தன் பெருமை மற்றும் தன் வாழ்க்கையின் ஒளி என நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார்.
இந்த விருதை நடிகர் அஜித்குமாருக்கு முன்னதாக நான்கு முன்னணி தமிழ் நடிகர்கள் வென்றிருக்கிறார்கள். அதன்படி தமிழ் சினிமாவில் முதன்முதலில் பத்ம பூஷன் விருது வென்ற நடிகர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். அவருக்கு கடந்த 1984-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அவருக்கு அடுத்தபடியாக அந்த மாபெரும் விருதை வென்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடந்த 2000-ம் ஆண்டு ரஜினிக்கு பத்ம பூஷ்ன் விருது வழங்கப்பட்டது.
44
Padma Bhushan Award Winners in Tamil Cinema
ரஜினிக்கு அடுத்தபடியாக, அவரது நண்பரும், நடிகருமான உலக நாயகன் கமல்ஹாசன் பத்ம பூஷன் விருதை வென்றிருந்தார். அவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு அவ்விருது வழங்கப்பட்டது. கமல்ஹாசனுக்கு பின்னர் புரட்சி கலைஞர் விஜயகாந்துக்கு பத்ம பூஷ்ன விருது அறிவிக்கப்பட்டது. அவர் மறைவுக்கு பின் அவருக்கு அவ்விருது வழங்கப்பட்டதால், அதை அவர் சார்பாக அவரது மனைவி பிரேமலதா விஜயாகந்த் வாங்கிக் கொண்டார். இந்த நிலையில் பத்ம பூஷன் விருது வெல்லும் ஐந்தாவது தமிழ் நடிகர் என்கிற பெருமை அஜித்குமாருக்கு கிடைத்துள்ளது.