ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதன் வெற்றியைக் கூட கொண்டாட நேரமின்றி ஆன்மீக சுற்றுலாவில் செம்ம பிசியாக உள்ளார் ரஜினிகாந்த். முதலில் இமயமலைக்கு சென்ற ரஜினி, அங்கு ஒரு வாரம் தங்கி அங்குள்ள ஆன்மீக தலங்களுக்கு சென்று வந்தார். அதை முடித்துக் கொண்டு சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஜார்க்கண்ட் சென்ற ரஜினிகாந்த், அங்கு தனது ஆன்மீக பயணத்தை தொடர்ந்தார். இதனிடையே ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.
ஜார்க்கண்ட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு உத்தர பிரதேசம் சென்ற ரஜினிகாந்த், அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் ஜெயிலர் படத்தை பார்க்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் யோகி ஆதித்யநாத் வராததால் அம்மாநில துணை முதல்வருடன் ஜெயிலர் படம் பார்த்தார் ரஜினி. இதையெல்லாம் முடித்துக் கொண்டு உபி முதல்வரை சந்திக்க நேரில் சென்ற ரஜினிகாந்த், அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது தான் தற்போது இணையத்தில் பற்றி எரிகிறது.
இதையும் படியுங்கள்... உ.பி.யை கலக்கும் 'ஜெயிலர்'! யோகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் ரஜினிகாந்த் போட்டோஸ்!
நடிகர் ரஜினிகாந்துக்கு தற்போது வயது 72 ஆகிறது. யோகி ஆதித்யநாத்துக்கோ 51 வயது தான். தன்னை விட 21 வயது இளையவரின் காலில் ரஜினிகாந்த் விழுந்ததால் அவரை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். இந்த செயல் மூலம் தமிழகத்தின் மானத்தை ரஜினிகாந்த் அடமானம் வைத்துவிட்டதாக சரமாரியாக சாடி வருகின்றனர். ரஜினி ரசிகர்களே அவரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருவதையும் பார்க்க முடிகிறது.
காலா படத்தில் தன் காலில் சிறுமி ஒருவர் விழ வரும் போது அதெல்லாம் வேண்டாம் என தடுத்து பஞ்ச் டயலாக் பேசிய ரஜினி, தற்போது ரியல் லைப்பில் இப்படி செய்துள்ளதை சுட்டிக்காட்டி, நெட்டிசன்கள் ரஜினிகாந்தை வறுத்தெடுத்து வருகின்றனர். ஒரு சிலரோ, நல்ல வேளை ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகும் முன்னர் ரஜினி இப்படி செய்யவில்லை, செஞ்சிருந்தா ஜெயிலரை செஞ்சிருப்பாங்க என கிண்டலடித்து வருகின்றனர்.
இப்படி ரஜினிகாந்தை நெட்டிசன்கள் திட்டித்தீர்த்து வரும் நிலையில், ரஜினி ரசிகர்களோ அவர் எதற்காக யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தார் என்பதற்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர். அது என்னவென்றால், “யோகி ஜி உத்திர பிரதேசத்தின் முதல்வர் மட்டுமல்ல, நாதசைவ சம்பிரதாயத்தை பின்பற்றும் கோரக்நாத் மடத்தின் பீடாதிபதியும் கூட. அவரைக் கண்டால் நமஸ்கரிக்க வேண்டுமென்பது தர்மம். அதை அப்படியே கடைபிடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி” என தங்கள் தலைவரை விட்டுக்கொடுக்காமல் பேசி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ரஜினிகாந்த் | வைரல் வீடியோ