
1990-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். இதையடுத்து அரசியலுக்கு வந்த அவர் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். பின்னர் எம்பி-யாக தேர்வாகி மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர் சினிமா மற்றும் அரசியல் இரண்டையும் விட்டுவிட்டு குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அங்கு ஐடி கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார் நெப்போலியன். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை விமர்சித்து நடிகர் நெப்போலியன் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் அவர் என்ன சொன்னார் என்பதை பார்க்கலாம்.
விஜய்க்கு அதிகளவிலான மக்கள் கூட்டம் வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நெப்போலியன், நடிகர்களுக்கு கூட்டம் வரத்தான் செய்யும். ரஜினி சாருக்கு, கமல் சாருக்கு, விஜயகாந்த் சாருக்கு வராத கூட்டமில்லை. எனக்குமே அந்த காலத்தில் நிறைய கூட்டம் வந்தது. அப்போலாம் சோசியல் மீடியாக்கள் கிடையாது. அதனால் அதை படம்பிடித்து காட்ட முடியல. அந்த கூட்டத்தையெல்லாம் ஒழுங்குபடுத்த கட்சிக் காரர்கள் இருப்பார்கள் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இவ்வளவு சம்பாத்தியத்தையும் விட்டுட்டு வர்றேன்னு சொல்றீங்க. மக்களுக்கு சேவை செய்ய வர்றேன்னு சொல்றீங்க. அப்போ மக்களோடவே போய் இருங்க. கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரைக்கு நடைபயணமா வாங்க. எவ்வளவு பெரிய... பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் அப்படி நடந்து வந்திருக்கிறார்களே. தன்னை பார்க்க வரும் கூட்டத்தை கண்ட்ரோல் பண்ண அவர்களிடமே ஆள் இல்லை. அவர்கள் எதுக்கெடுத்தாலும் அரசாங்கத்தை நம்பிகிட்டு இருக்கக் கூடாது. இது அவங்களோட கூட்டம். அவங்க தான் பார்த்துக்கணும் என நெப்போலியன் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் பற்றிய கேள்விக்கு பதிலளித்த நெப்போலியன், அரசியல் வேறொரு களம், இது சினிமா இல்லை. அங்கு பஞ்ச் டயலாக் பேசுவது போல் இங்க பேசிட்டு போக முடியாது. கொள்கைகளை பேசுங்க. சும்மா வந்து கிண்டல் பண்ணிகிட்டு, சிஎம்-ஐ கிண்டல் அடிக்குறது, ஏழனமா பேசுவது கூடாது. விஜய்யுடைய சுபாவமே சினிமா இண்டஸ்ட்ரியில் எல்லாருக்குமே தெரியும், யாருடனும் நெருங்கி பழகவே மாட்டார். எனக்கும் அவருக்குமே நிறைய சங்கடங்கள் ஏற்பட்டிருக்கு. 18 வருஷத்துக்கு முன்னாடி அது நடந்தது. அதுக்கப்புறம் அவருடைய படங்களை நான் பார்ப்பதில்லை. அவரைப்பற்றி பேசுவதும் இல்லை. ஒரு நடிகன் அரசியலுக்கு வரும்போது சிலவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும். அதை மாற்றாவிட்டால், என்றைக்குமே அவரால் தலைவர் ஆக முடியாது என ஒரே போடாக போட்டுள்ளார் நெப்போலியன்.
தொடர்ந்து பேசிய நெப்போலியன், விஜய் தன்னுடைய தாய், தகப்பனையே கிட்ட சேர்த்துக்க மாட்டாரு. மனைவியையும் கிட்ட சேர்த்துக்கல. அவர் மகனையும் கிட்ட சேர்த்துக்கவில்லை. இதையெல்லாம் அமெரிக்காவில் இருக்கும் என்கிட்ட எல்லாரும் கேக்குறாங்க. சொந்த குடும்பத்தையே கவனிக்காதவர், நம்மளை எப்படி ஆட்சி செய்வார் என்று மக்களிடம் கேள்வி எழுமா... இல்லையா? மேடையில் சும்மா தாய், தகப்பனை கூட்டிட்டு வந்து காட்டுகிறார். ஆனால் அவர் உண்மையான அன்போடு இல்லை.
அவரோட அப்பா படிப்படியா அவரை வளர்த்து கொண்டு வந்தாரு. எல்லா கால்ஷீட்டை பார்த்துக்கிட்டு, கதைகளை தேர்வு பண்ணி, அவரை பெரிய ஆளாக வளர்த்துவிட்டார். அவரை நீங்க வீட்டுக்குள்ளேயே சேர்க்க மாட்டிக்கிறீங்க. இது எந்த விதத்தில் நியாயம்? உங்களுடைய கேரக்டர் நல்லா இருந்தால் தான் உங்களை பின் தொடரும் ரசிகர்களும் அதேமாதிரி இருப்பார்கள். முதலில் நீங்கள் உங்கள் கேரக்டரை மாற்றிக் கொள்ள வேண்டும் என விஜய்க்கு வலியுறுத்தி உள்ளார் நெப்போலியன்.