
Joshua Sridhar Making Music For 17 Years Without a Studio : தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் கொடுப்பதற்கு கதை எந்தளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு பாடல்களும் முக்கியம். அப்படி வரும் பாடல்களுக்கு பின்னணி இசை ரொம்பவே முக்கியம். இசை, சாங்ஸ் மற்றும் ஸ்டோரி இந்த மூன்றும் சேர்ந்து தான் படத்தை ஹிட் கொடுக்க செய்கிறது. இதற்கு சமீபத்தில் திரைக்கு வந்த லப்பர் படத்தை உதாரணமாக சொல்லலாம். படத்தில் உள்ள பாடல்கள் ஹிட் கொடுத்ததோடு படத்தின் கதையும் ரசிகர்களுக்கு பிடித்துப் போக படமோ ஹிட்டோ ஹிட்டு.
ஆனால், படத்தின் கதை நன்றாக இருந்தாலும் கூட பாடல்களும், இசையும் கை கொடுக்கவில்லை என்றால் அந்தப் படம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகம் தான். கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் திரைக்கு வந்த கங்குவா படத்தில் இரைச்சல் கொஞ்சம் அதிகமாக இருந்ததாக விமர்சனம் எழுந்தது. அதோடு, படமும் முதல் நாளிலியே எதிர்மறை விமர்சனத்தை பெற்று கொடுத்தது. இது சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத தோல்வி படமாக அமைந்தது.
இந்த நிலையில் தான் நான் 17 வருடங்களாக ஸ்டூடியோவே இல்லாமல் தான் ஒவ்வொரு படத்திற்கும் மியூசிக் போட்டேன் என்று ஒரு இசையமைப்பாளர் பெருமையாக கூறியிருக்கிறார். அவர் யார், எந்தப் படங்களுக்கு அப்படி இசையமைத்தார், அந்த படம் ஹிட் கொடுத்ததா இல்லையா என்பதை இந்த தொகுப்பில் முழுமையாக நாம் தெரிந்து கொள்வோம். 17 வருடங்களாக எந்தவித ஸ்டூடியோவும் இல்லாமல் இசையமைத்த இசையமைப்பாளர் வேறு யாருமில்லை, அவர் தான் பரத்திற்கு ஹிட் கொடுத்த காதல் படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா, சுகுமார், தண்டபாணி, சூரி ஆகியோர் பலர் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி திரைக்கு வந்த படம் காதல். முழுக்க முழுக்க காதல் கதையை மையப்படுத்திய இந்தப் படம் பரத்திற்கு ஒரு அடையாளத்தையும், தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தையும் கொடுத்தது. இந்தப் படத்திற்கு ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்திருந்தார். இது தான் அவருடைய முதல் படம். பிலிம்பேர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தார். ஆனால், விருது கிடைக்கவில்லை.
இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த 8 பாடல்களும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. காதல் படத்திற்கு பிறகு அபாயம், உயிர், சென்னை காதல், நினைத்து நினைத்து பார்த்தேன், கல்லூரி, அப்பாவி, வெப்பம், வித்தகன், யுவன், அச்சம் தவிர், புலன் விசாரணை 2, வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான், பறந்து செல்ல வா, ஒரு குப்பத்து கதை, ஜூலை காற்றில் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். 25 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த ஜோஸ்வா ஸ்ரீதர், 2 வருடம் இசை பள்ளியில் வெஸ்டர்ன் கிளாசிக்கல் படித்துள்ளார். மேலும், அவர் 8 கிரேடுகளை தியரி ஆஃப் மியூசிக் மற்றும் பியானோ ஆகியவற்றில் படித்து முடித்துள்ளார். படித்த பிறகு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை குரூப்பில் 8 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு தான் காதல் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார்.
இந்த நிலையில் தான் ஸ்டூடியோ இல்லாமல் 17 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் குறுத்து அவர் பேசியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே மியூசிக் ஸ்டூடியோ இல்லாமல் 17 வருடம் இசையமைத்த ஒரே ஒரு இசையமைப்பாளர் நான் தான். இதனை நான் பெருமையாக சொல்லிக் கொள்வேன். இதற்கு காரணம், இசையமைக்க குறைவான பட்ஜெட் தான்.
அந்த பட்ஜெட்டை வைத்துக் கொண்டு வீட்டு வாடகையும் கொடுத்துக் கொண்டு மக்கள் ரசிக்கும்படியான இசையை கொடுத்திருக்கிறேன். இதைவிட வேறு என்ன செய்ய முடியும் என்று கூறியிருக்கிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் சினிமாவில் பணியாற்றிய இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதருக்கு இப்போது பட வாய்ப்புகள் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.