
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் ஹீரோவாக நடித்து கடந்த 1999-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் முதல்வன். சாமானிய மக்களில் ஒருவன் ஒரு நாள் முதல்வன் ஆனால் என்ன நடக்கும் என்பதை மிகவும் நேர்த்தியாக சொல்லியிருப்பார் இயக்குனர் ஷங்கர். முதல்வன் படம் நடிகர் அர்ஜுன் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இப்படத்தின் கதையை ரஜினி, விஜய் ஆகியோர் ரிஜெக்ட் பண்ணிய கதை அனைவருக்கும் தெரியும். ஆனால் அப்படத்தில் பலரும் கவனிக்காத ஒரு விஷயம் இருக்கு. அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.
முதல்வன் படத்தில் மிகவும் ஹைலைட்டான விஷயமே அர்ஜுன் ஒருநாள் முதல்வர் ஆவது தான். அப்படி ஒருநாள் முதல்வராகி என்ன செஞ்சிருவனு பார்க்கிறேன் என சவால்விட்ட ரகுவரனே வாயடைத்துப் போகும் வண்ணம் அர்ஜுன் ஒரு திட்டத்தை கொண்டு வருவார். அதுதான் புகார் பெட்டி திட்டம். அந்த புகார் பெட்டியில் மக்கள் தங்களுக்கு உள்ள சிக்கல்களை எழுதி போட்டால் அதன்மீது உடனடி ஆக்ஷன் எடுக்கப்படும் என்றும் அர்ஜுன் அறிவித்திருப்பார்.
அதையடுத்து பல லட்சம் புகார்கள் அந்த பெட்டியில் குவியும். அந்த புகார் பெட்டியில் ஒரு வரலாறே ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.. ஆம், அந்த புகார் பெட்டியில் ஒரு மணியை மாடு ஒன்று இழுப்பது போன்ற ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்பட்டிருக்கும். அந்த ஸ்டிக்கருக்கு பின்னணியில் தான் ஒரு மிகப்பெரிய வரலாறே இருக்கிறது.
அது என்னவென்றால், தமிழ்நாட்டின் சோழ தேசத்தை ஆண்ட நிறைய மன்னர்களில், மனுநீதி சோழன் நீதிக்கும் நேர்மைக்கும் பெயர்வாங்கியவர் ஆவார். அவருடைய ஆட்சி காலத்தில், அவர் தன்னுடைய அரசவை வாசலில் ஒரு பெரிய மணி ஒன்றை கட்டிவைத்திருந்தார். யாருக்கு என்ன குறை இருந்தாலும் அந்த மணி அடித்தால், அரசரின் அறைவரை அந்த மணியோசை கேட்குமாம்.
மணியோசை கேட்டதும் வெளியே வந்து, மணியடித்தவர்களின் குறைகளை அரசர் தீர்த்துவைப்பாராம். அப்படி ஒருநாள் மணியடிக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது அந்த மன்னருக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. ஏனெனில் அந்த மணியை மாடு ஒன்று அடித்துக் கொண்டு இருந்ததாம்.
இதையும் படியுங்கள்... ஒத்த போஸ்டர் கூட ஒட்டாமல் சஸ்பென்ஸ் ஆக ரிலீஸ் ஆகி வசூல் சாதனை படைத்த எம்.ஜி.ஆர் படம் பற்றி தெரியுமா?
பின்னர் மன்னர் அதுபற்றி விசாரித்ததில், அந்த மன்னரின் மகன் தேரில் உலா வரும்போது, அந்த மாட்டினுடைய கன்றுக்குட்டி, விழுந்து அடிபட்டு செத்துவிட்டதாம். தன்னுடைய கன்றை கொன்றவனுக்கு தண்டனை பெற்றுத்தர கோரி தான் அந்த பசுமாடு அரசரிடம் மணியடித்து புகார் தெரிவிக்க வந்திருந்ததாம்.
அந்த பசுவுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால் அரசர் இதை செய்வாரா என பலரும் சந்தேகித்த நிலையில், தன்னுடைய அமைச்சரிடம் அதே தேரால் தன் மகனை கொல்லச் சொல்லி உத்தரவிட்டு இருக்கிறார்.
ஆனால் இளவரசனை கொல்ல மனம் வராத அமைச்சர், வாளை எடுத்து தன்னைத்தானே அறுத்துக் கொண்டு செத்துவிட்டாராம். யாரும் இளவரசனுக்கு தண்டனை கொடுக்க முன்வராததால், தானே அந்த தேரை எடுத்துக்கொண்டு மகன் மீது ஏற்றி கொன்றுவிட்டாராம். இந்த செய்தி தமிழ் இலக்கியங்களில் வந்திருக்கிறது.
எப்படி மனுநீதி சோழன் கதையில் வரும் மணியடித்ததும், அது யாராக இருந்தாலும், எவராக இருந்தாலும், அவர்களுக்கு என்ன குறையாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு நேர்மையான தீர்ப்பு கிடைக்கிறதோ, அதேபோல் முதல்வன் படத்தில் அர்ஜுன் கொண்டுவந்த புகார் பெட்டியில் புகார் தெரிவிப்பவர்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்பதை அந்த ஒற்றை ஸ்டிக்கர் மூலம் சூசகமாக சொல்லி இருக்கிறார் ஷங்கர்.
இதையும் படியுங்கள்... இசைப்புயலின் கெத்தான சம்பவம்! ஹாலிவுட் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தமிழ் பாட்டு பற்றி தெரியுமா?