
தமிழ் சினிமாவில் கோலோச்சிய ஜாம்பவான் நடிகர்களுள் ஒருவர் எம்.ஜி.ஆர். அவர் நடித்த படங்கள் இன்றளவும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அப்படி எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான படமொன்று ஒத்த போஸ்டர் கூட ஒட்டாமல் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஆன கதை பற்றி தற்போது பார்க்கலாம்.
அந்த படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன். இப்படம் கடந்த 1973-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்தின் கதை என்னவென்றால், மின்னலோட ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் விஞ்ஞானி ஒருவர் இருக்கிறார். அவரின் முயற்சி வெற்றியடைந்ததும் அவரை பலரும் வியந்து பாராட்டுகின்றனர். அப்படி இருக்கையில் ஒரு விஞ்ஞானி மட்டும் அந்த கண்டுபிடிப்பை உலகத்துக்கு விற்றால் நிறைய பணம் கிடைக்கும் என ஐடியா கொடுக்கிறார்.
ஆனால் முருகன் என்கிற விஞ்ஞானி கேரக்டரில் நடித்த எம்.ஜி.ஆர் அதற்கு மறுத்துவிடுகிறார். இதையடுத்து வில்லன் விஞ்ஞானியான அசோகன் அந்த சீக்ரெட்டை தெரிந்துகொள்ள பல சதி வேலைகளை செய்கிறார். இதனால் உஷாரான முருகன் அந்த ரகசிய பார்முலாவை நான்காக பிரித்து வெவ்வேறு இடங்களில் வைத்து விடுகிறார். அதன் பின்னர் அதை எப்படியாவது எடுக்க வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு திரியும் அசோகன், மயக்க மருந்துடன் கூடிய துப்பாக்கியால் சுட்டதில் எம்ஜிஆர் கீழே தவறி விழுந்து அவருக்கு பழசெல்லாம் மறந்துபோகிறது.
பின்னர் முருகனின் தம்பியாக ராஜு என்கிற கேரக்டரில் வரும் எம்ஜிஆர். தன் அண்ணன் வைத்த ரகசியங்களை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குவார். அப்போது அவர் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் தான் படத்தின் மீதிக்கதை.
இப்படத்தில் 2 எம்.ஜி.ஆர், சந்திரகலா, லதா மற்றும் மஞ்சுளா என மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். 6 வில்லன்கள், 8 சண்டைக்காட்சி, 10 பாட்டு, பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடத்தி படு பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்தது மட்டுமின்றி இயக்கியும் இருந்தார் எம்.ஜி.ஆர்.
தாய்லாந்து, ஜப்பான் புத்தர் கோவில், மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் என படத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல் உலகம் முழுக்க சுற்றி தான் இதன் படப்பிடிப்பை எடுத்துள்ளனர். இந்த பிரம்மாண்ட படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் திமுகவினர் தடுத்துள்ளனர். எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து பிரிந்து சென்ற பின்னர் அதிமுக-வை தொடங்கினார். அந்த சமயத்தில் இந்த படம் ரிலீஸ் ஆனால் அவருக்கு மீண்டும் பெயரும் புகழும் கிடைத்துவிடும் என அஞ்சி திமுகவினர் அதனை ரிலீஸ் செய்ய விடக்கூடாது என முடிவோடு இருந்தார்களாம்.
இதையும் படியுங்கள்... இசைப்புயலின் கெத்தான சம்பவம்! ஹாலிவுட் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தமிழ் பாட்டு பற்றி தெரியுமா?
அந்த காலத்தில் தமிழ்நாடு முழுக்க படத்துக்கு 40 முதல் 50 பிரிண்டுகள் வரை போடுவார்களாம். அதனால் தியேட்டர்களுக்கு வெளியே திமுகவினர் ஆள்போட்டு, எம்.ஜி.ஆர் பட பெட்டி வந்தால் அதை எரித்துவிட வேண்டும் என்கிற உத்தரவும் பறந்ததாம். அதையும் மீறி அனைத்து தியேட்டர்களிலும் பின்வாசல் வழியாக பெட்டியை கொண்டுவந்து இறக்கிவிட்டதாம் எம்ஜிஆர் டீம்.
படத்தின் ரிலீஸ் தேதி முன்கூட்டியே அறிவித்துவிட்டதால் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்கிற பதற்றம் எம்ஜிஆர் ரசிகர்களிடமும் இருந்திருக்கிறது. ஆனால் படத்தின் ரிலீஸ் அன்று வரை கூட அப்படம் குறித்து எந்த ஒரு போஸ்டரும் ஒட்டப்படவில்லையாம். போஸ்டர் ஒட்டாமலேயே தியேட்டரில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார் எம்ஜிஆர்.
படம் ரிலீஸ் ஆனது தெரிந்ததும் ரசிகர்கள் தியேட்டர் நோக்கி படையெடுக்க, படத்தை நிறுத்தி பிரச்சனை செய்ய வேண்டும் என்று காத்திருந்த திமுகவினரும் தியேட்டருக்குள் சென்றதும் எம்ஜிஆரின் நடிப்பை பார்த்து மெய்மறந்து விசிலடிக்க தொடங்கிவிட்டார்களாம் அந்த அளவுக்கு அவரின் நடிப்பு அனைவரையும் ஈர்த்திருக்கிறது.
அப்படி போஸ்டரே ஒட்டாமல் ரிலீஸ் ஆன உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி மாஸ் காட்டியுள்ளது. அப்படத்தின் மூலம் தனது திறமையை மட்டுமின்றி தனக்கு இருக்கும் ரசிகர் பலத்தையும் நிரூபித்து காட்டி இருக்கிறார் எம்.ஜி.ஆர். போஸ்டர், பப்ளிசிட்டியே இல்லாமல் ஒரு படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என்று சவால் விட்டவர்கள் மூஞ்சில் உலகம் சுற்றும் வாலிபன் பட வெற்றி மூலம் கரியை பூசி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.
இதையும் படியுங்கள்... பறிபோன பல உயிர்கள்.. இயக்குனர் பாலச்சந்தரை முடக்கிய கண்ணதாசனின் அந்த ஒரு பாடல்!