மு.க.ஸ்டாலின் முதல் விஜய் வரை.. இரவோடு இரவாக முக்கிய பிரபலங்களின் ப்ளூ டிக்கை நீக்கிய டுவிட்டர் - என்ன காரணம்?

First Published Apr 21, 2023, 8:35 AM IST

டுவிட்டர் நிறுவனம் திடீரென முதல்வர் மு.க.ஸ்டாலின், தளபதி விஜய், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் தோனி உள்பட ஏராளமான பிரபலங்களின் ப்ளூ டிக்கை நீக்கி உள்ளது.

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளார். அப்படி அவர் கொண்டுவந்த ஒரு முக்கியமான மாற்றம் தான் சந்தா கட்டி ப்ளூ டிக் பெறுவது. இதற்கு முன்னர் வரை டுவிட்டரில் அதிக பாலோவர்களை கொண்ட பிரபலங்களுக்கும், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர், நடிகைகள் ஆகியோருக்கு மட்டும் ப்ளூ டிக் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின்னர் சந்தா செலுத்தினார் யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக்கை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்து அதன் மூலம் கல்லாகட்டி வருகிறார். அவரின் இந்த அறிவிப்பால் டுவிட்டர் கணக்கை பயன்படுத்தும் சாமானிய மக்களும் ப்ளூ டிக் பெற முடிந்தது. மறுபக்கம் பிரபலங்களின் பெயரில் போலி கணக்குகளை தொடங்கி, அதற்கு ப்ளூ டிக் வாங்கி சிலர் மோசடி செய்த சம்பவங்களும் அரங்கேறின. இப்படி சாதக, பாதகங்கள் நிறைந்ததாக உள்ளது இந்த ப்ளூ டிக் சந்தா நடைமுறை.

இதையும் படியுங்கள்... சமந்தாவின் தோல்வியை மறக்கடித்த 'சிட்டாடல்' குழுவினருடன் செம்ம பார்ட்டி மூடில் வெளியிட்ட வைரல் போட்டோஸ்!

இது ஒருபுறம் இருக்க, டுவிட்டரில் ஏற்கனவே ப்ளூ டிக் பெற்றிருந்தவர்கள் அதனை தொடர வேண்டும் என்றால் அதற்கான சந்தா செலுத்த வேண்டும் என்று அறிவித்திருந்ததோடு, அதற்கு காலக்கெடுவும் விதித்திருந்தார். அந்த காலக்கெடு நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து சந்தா கட்டாத பிரபலங்களின் டுவிட்டர் ப்ளூ டிக் நீக்கப்பட்டு உள்ளது. இதனால் மில்லியன் கணக்கிலான பாலோவர்களைக் கொண்டவர்களும் ப்ளூ டிக்கை இழந்துள்ளனர்.

அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராகுல் காந்தி, அண்ணாமலை உள்பட ஏராளமான அரசியல் தலைவர்களும், விராட் கோலி, எம்.எஸ்.தோனி, கே.எல்.ராகுல். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, கால்பந்து வீரர் ரொனால்டோ உள்பட ஏராளமான விளையாட்டு வீரர்களும், ரஜினிகாந்த், விஜய், கார்த்தி, சீயான் விக்ரம், சிம்பு, ஷாருக்கான் உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்களும் டுவிட்டரில் ப்ளூ டிக்கை இழந்துள்ளனர். இவர்கள் மீண்டும் டுவிட்டர் ப்ளூ டிக்கை பெற வேண்டும் என்றால் மாதம் ரூ.900 சந்தா செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... யம்மாடியோவ்..நயன்தாரா சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா? ஜெட் விமானம் முதல் ஸ்கின்கேர் நிறுவனம் வரை பெரிய லிஸ்ட்!

click me!