தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்தினர் உடன் வந்து கமல்ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்டு, அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
நடிகரும், மாநிலங்களவை உறுப்பினரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், நேற்று தன்னுடைய 71வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி தன்னுடைய இல்லத்திலேயே திரையுலக பிரபலங்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
24
கமல்ஹாசன் பர்த்டே பார்ட்டி
அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய மனைவி துர்கா ஸ்டாலின் உடன் வந்து கமல்ஹாசனை கட்டியணைத்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். முதல்வருடன், அவரது மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினும், அவரது மனைவி கிருத்திகாவும் வந்திருந்தனர். மேலும் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். அப்போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
34
முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது : “என்னுடைய அழைப்பை ஏற்று எனது இல்லத்துக்கு வருகை தந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசன் அவர்களையும் கௌரவப்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், அன்புக்குரிய நண்பர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் தம்பதியருக்கும், தமிழ்நாடு துணை முதலமைச்சர், என் அன்புக்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திருமதி. கிருத்திகா உதயநிதி தம்பதியருக்கும், என் அன்புக்குரிய நண்பர் சபரீஸன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மரியாதையுடனான சிறு விலகல் இருக்கும். ஆனால், முத்தமிழறிஞர் உடனான எனது உறவு மூன்று தலைமுறைத் தாண்டிய நெருக்கம் கொண்டது. நிபந்தனைகளற்ற தூய பேரன்பினால், அளவு கடந்த மரியாதையால் பிணைத்துக்கட்டப்பட்டது எங்கள் உறவு. அதை உறுதி செய்யும் வகையில் அமைந்தது இந்த சந்திப்பு. மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம் என கமல் பதிவிட்டுள்ளார்.