எம்ஜிஆரின் நிறைவேறாமலே போன கடைசி ஆசை.. அவரது வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

Published : Jun 12, 2025, 03:49 PM ISTUpdated : Jun 12, 2025, 03:50 PM IST

எம்ஜிஆர் தனது இறுதி காலத்தை தமிழகத்தின் முக்கிய ஊரான திருச்சியில் கழிக்க விரும்பினார். ஆனால் அவரது ஆசை கடைசி வரை நிறைவேறாமலேயே போனது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

PREV
15
எம்ஜிஆருக்கும் திருச்சிக்கும் இடையே இருந்த உறவு

தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளின் வரலாற்றில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட இடமாக திருச்சி விளங்கி வருகிறது. திருச்சியில் மாநாடு நடத்தினால் அது திருப்புமுனையை தரும் என்ற நம்பிக்கை தமிகத்தில் உள்ள பல கட்சிகளிடையே இருந்து வருகிறது. அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்கும் திருச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எம்ஜிஆர் அதிமுகவின் இரண்டாவது மாநில மாநாட்டை திருச்சியில் நடத்தி தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். எம்ஜிஆரின் நலத்திட்டங்களில் ஒன்றான சத்துணவு திட்டத்தையும் திருச்சியிலேயே தொடங்கினார். திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்றப் போவதாகவும் அறிவித்தார்.

25
ஆசை ஆசையாய் இல்லம் வாங்கிய எம்ஜிஆர்

சென்டிமென்ட் விஷயங்களில் நம்பிக்கை கொண்ட எம்ஜிஆர் திருச்சியில் தொடங்கும் செயல்கள் நல்லபடியாக அமையும் என்று நம்பினார். தனது வயதான காலத்தில், அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், திருச்சியில் தனது இறுதி காலங்களை கழிக்க விரும்பினார். இதற்காக அவர் பங்களா ஒன்றையும் வாங்கினார். ஆனால் அவரின் அந்த கடைசி ஆசை நிறைவேறாமலேயே போனது. சிதிலமடைந்த நிலையில் காணப்படும் அந்த பங்களா தற்போது குப்பை கொட்டும் இடமாகவும், ஆக்கிரமிப்புகளாலும் சூழப்பட்டுள்ளது. யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் அந்த பங்களாவைச் சுற்றி தற்போது பல சர்ச்சைகள் நடந்து வருகிறது.

35
கடைசி காலத்தை திருச்சியில் கழிக்க விரும்பிய எம்ஜிஆர்

திருச்சியில் இல்லம் வாங்க விரும்பிய எம்ஜிஆர் தனது விருப்பத்தை அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த திருச்சி நல்லுச்சாமியிடம் தெரிவித்தார். குடமுருட்டி ஆற்றங்கரை அருகே காவிரி கரையிலிருந்து உறையூர் செல்லும் திருத்தாந்தோணி சாலையில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தோட்டங்களுடன் கூடிய பங்களா மாதிரியான வீடு, பணியாளர் இல்லம் ஆகியவற்றுடன் கூடிய இடத்தை தேர்வு செய்து, எம்ஜிஆருக்கு நல்லுச்சாமி தெரிவித்தார். எம்ஜிஆருக்கும் அந்த இடம் பிடித்துப்போகவே அந்த இடத்தை கிரையம் செய்ய சம்மதித்தார். சோமரசம்பேட்டையைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்கிற பாதிரியாருக்கு சொந்தமான அந்த இடம் எம்ஜிஆர் பெயரில் கிரயம் செய்யப்பட்டது.

45
நிறைவேறாமலேயே போன கடைசி ஆசை

மே 8, 1984 ஆம் ஆண்டு திருச்சி உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் எம்ஜிஆர் பெயரில் அந்த பங்களா பதிவு செய்யப்பட்டது. இதற்கு சாட்சியாக அதிமுக அமைச்சர் நல்லுச்சாமி மற்றும் உறையூரைச் சேர்ந்த வீ.சந்திரன் இருவரும் சாட்சி கையொப்பமிட்டுள்ளனர். எம்ஜிஆர் தங்குவதற்கு வசதியாக முதல் மாடி, தரைத்தளம் ஆகியவை புனரமைக்கப்பட்டது. விரைவில் அந்த பங்களாவில் வந்து தங்குவதாக சொன்ன எம்ஜிஆருக்கு திடீரென உடல் நலம் குன்றியது. பின்னர் அவர் அமெரிக்காவிற்கு மேல் சிகிச்சைக்காக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. சில காலம் அமெரிக்காவிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த எம்ஜிஆர், இந்த இல்லத்திற்கு வராமலேயே மரணமடைந்து விட்டார்.

55
குப்பைத் தொட்டியாய் காட்சியளிக்கும் எம்ஜிஆரின் வீடு

அவர் ஆசை ஆசையாய் வாங்கி புனரமைத்த கட்டிடம் இன்று சிதிலமடைந்து காணப்படுகிறது. பிரதான கட்டிடத்தை தவிர சுற்றுச்சுவர்கள் சிதலமடைந்தும், பொதுமக்கள் குப்பை கொட்டும் இடமாகவும் மாறி உள்ளது. அந்தத் தோட்டத்தின் கிழக்கு பகுதியை சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்களும் கட்டியுள்ளனர். இந்த நிலையில் தற்போது அந்த பங்களாவை சிலர் சட்டவிரோதமாக பட்டா பெயர் மாற்றம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. முறைப்படி எம்ஜிஆரின் அண்ணன் குடும்பத்தினருக்கு அந்த இடம் செல்ல வேண்டும் என்று ஓய்வு பெற்ற சர்வேயர் சார்லஸ் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தை கட்டி எழுப்பிய எம்ஜிஆர், ஆசை ஆசையாய் வாங்கிய இல்லம் சிதிலமடைந்து இருப்பது அவரின் தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories