Published : Jun 12, 2025, 03:00 PM ISTUpdated : Jun 12, 2025, 03:03 PM IST
‘தக் லைஃப்’ திரைப்பட பாடகியின் பிறந்தநாள் பார்ட்டியில் சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மது வகைகள் மற்றும் கஞ்சா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே திரையுலகில் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பிறந்தநாள் பார்ட்டிகள், படத்தின் வெற்றி விழாக் கொண்டாட்டங்களில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் போதைப்பொருள் வழக்கில் சிக்கினார். தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பாளர் கே.பி சவுத்ரியும் போதை பொருள் வழக்கில் சிக்கினார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் நடிகைகளுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கில் பல முன்னணி நடிகர் நடிகைகளும் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில்,பின்னர் அந்த விவகாரம் அப்படியே அடங்கிப் போனது.
25
‘தக் லைஃப்’ பாடகி மங்லி
இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் மீண்டும் போதைப் பொருள் சர்ச்சை வெடித்துள்ளது. தெலுங்கு திரையுலகில் பிரபல பின்னணி பாடகையாக வலம் வருபவர் மங்லி. இவரது நாட்டுப்புற பாடல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். இவர் நடத்திவரும் youtube சேனலுக்கு மூன்று மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைப்ர்கள் இருக்கின்றனர். ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “ஜிங்குச்சா..” பாடலை இவர் தெலுங்கில் பாடியுள்ளார். கடந்த ஜூன் 10ஆம் தேதி தனது 31வது பிறந்த நாளை பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் கொண்டாடி இருந்தார்.
35
மங்லி நடத்திய பிறந்தநாள் பார்ட்டி
இந்தப் பார்ட்டியில் மங்லியின் நெருங்கிய நண்பர்கள், உறவினர், அரசியல் பிரபலங்கள் உட்பட 45 பேர் கலந்து கொண்டனர். இது போன்ற பொது நிகழ்வுகளில் மது அருந்துவதற்கும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கும் முறையாக அனுமதி வாங்க வேண்டும் என்கிற விதி இருக்கிறது. ஆனால் மங்லி பிறந்தநாள் விழாவிற்கு முறையாக அனுமதி வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் அந்த நட்சத்திர விடுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மது வகைகள், கடத்தி வரப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா பொருட்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
அவற்றை பறிமுதல் செய்ததோடு 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பார்ட்டியில் கலந்து கொண்டு போதை பொருட்கள் பயன்படுத்தியதாக சந்தேகப்படுபவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் பாடகி மங்லியும் போதைப் பொருள் பயன்படுத்தினாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாடகி மங்லி விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
55
மங்லி விளக்கம்
அதில், “பார்ட்டியில் மது விநியோகம் செய்யவும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கும் அனுமதி வாங்க வேண்டும் என்கிற விவரம் தனக்கு தெரியாது. எந்த வித போதைப் பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. பார்டியில் கலந்து கொண்ட ஒருவர், சில நாட்களுக்கு முன்பு கஞ்சா பயன்படுத்தியதாக காவல்துறையிடம் ஒப்புக் கண்டுள்ளார். மற்றபடி இது எனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்ட ஒரு நிகழ்வு மட்டுமே. காவல்துறை நடத்தி வரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன்” என அவர் கூறியுள்ளார்.