
விஜய் டிவி தொலைக்காட்சியில், அக்டோபர் 6-ஆம் தேதி முதல்... பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்க உள்ளது. இந்த சீசனை, பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால், போட்டியாளர் தேர்வு முதல் பிக்பாஸ் வீட்டை வடிவமைக்கும் பணிகள் என அனைத்தும் பரபரப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கான வீட்டின் செட் அமைக்கும் பணி, செம்பரப்பக்கம் பகுதியில் உள்ள EVP ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
இந்த பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவர்... சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில், அவருக்கு கை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து காரணமாக, போலீசார் விசாரணை நடத்தி வந்ததால் கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் செட் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டதாகவும், மீண்டும் அந்த பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றிய தகவல் வழக்கம் போல் யூகத்தின் அடிப்படையில் வெளியாகி வரும் நிலையில், இந்த லிஸ்டில் பிரபல காமெடி நடிகரின் மகனும் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகராக முயற்சி செய்து வரும் இவருக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே சிபாரிசு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் வேறு யாரும் அல்ல... கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு தான். இவருக்கு நடிகர் மயில்சாமி வைத்த நிஜ பெயர் அருமைநாயகம் என்றாலும் சினிமாவில் நடிக்க துவங்கிய பின்னர், நடிப்புக்காக அன்பு என மாற்றி கொண்டார். யுவன் கடந்த 2011-ஆம் ஆண்டு இயக்குனர் ராசு மதுரவன் இயக்கத்தில் 'பார்த்தோம் பழகினோம்' என்கிற படத்தில் அன்பு நடித்த நிலையில், பின்னர் பட்ஜெட் பிரச்சனை காரணமாக இந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு 'அந்த 60 நாட்கள்' என்கிற காமெடி படத்தில் நடித்தார். இந்த படத்தை ராஜேஸ்வரன் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட பின்னரும், இதுவரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
கமல் இடத்தை நிரப்ப போகும் விஜய் சேதுபதியை அன்றே கணித்த ரஜினிகாந்த்!
அதன்பின்னர் கொக்கு, பொம்மலாட்டம் நடக்குது, திரிபுரம் போன்ற படங்களில் மனம் தளராமல் அன்பு நடித்த போதும்... அனைத்து படங்களும் எதோ சில காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. ஆனால் அன்பு ஒரு நடிகராகவேண்டும் என்கிற எண்ணத்தை மட்டும் கைவிடவில்லை. அப்பா தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி காமெடி நடிகர் என்றாலும் கூட ,அப்பாவின் உதவியை நாடாமல், பல ஆடிஷன்களில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை நிரூபித்து தான் வாய்ப்புகளை பெற்றார். இவரின் தீவிர முயற்சிக்கு கைகொடுக்கும் விதமாக, சுமார் 9 வருடங்களுக்கு பின்னர் அன்பு மயில்சாமி ஹீரோவாக நடித்த, 'அல்டி' என்கிற திரைப்படம் 2020-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. காமெடி ஜார்னரில் எடுக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது.
அன்பு தற்போது வரை தமிழ் சினிமாவில் ஜெயிக்க போராடி வருகிறார். அதே போல் மயில் சாமியின் இரண்டாவது மகனான, யுவனும் சினிமாவில் ஹீரோவாக முயன்ற நிலையில்... சத்யராஜின் தீர்ப்புகள் விற்கப்படும் என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து டிராப் ஆனதால், வெள்ளித்திரைக்கு கும்பிடு போட்டுவிட்டு, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'தங்கமகள்' சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில், மயில்சாமியின் மகன் அன்பு சினிமா வாய்ப்பை கைப்பற்ற... பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முயற்சி செய்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... போன் மூலம் விஜய் டிவி தரப்பை தொடர்பு கொண்டு, இவருக்கு சிபாரிசு செய்துள்ளாராம். ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை என்றாலும்... அன்பு மயில்சாமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள 90 சதவீத வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.