மனோபாலா தன்னுடைய இளமைப் பருவத்திலேயே, சினிமா மீது இருந்த தீவிர ஆசையால் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம்... மறுகூரை விட்டு, பெற்றோரிடம் படிக்கச் செல்கிறேன் என்று பொய் சொல்லி விட்டு, சென்னை வந்து சேர்ந்தார். பெற்றோர் படிப்பிக்காக அனுப்பும் பணத்தை வைத்து படித்தாரோ இல்லையோ, சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் பல படத்தைப் பார்த்தார். இதன் மூலம் தானும் படம் இயக்க வேண்டும் என்ற ஆசை அவருக்குள் துளிர்விட்டது.
அந்த வகையில், பாரதிராஜாவிடம் புதிய வார்ப்புகள் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய மனோபாலா... பின்னர் ஒரு சில வருடங்களிலேயே படம் எடுக்கும் திறமையை வளர்த்துக் கொண்டு, ஆகாய கங்கை என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க மனோபாலாவுக்கு மூன்று வருடங்கள் ஆனது.
படங்கள் இயக்குவதை தாண்டி, தற்போதைய இளம் ரசிகர்கள் மத்தியில் முன்னணி காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் பிரபலமானார். இந்நிலையில், மனோபாலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் உடல்நலம் தேறி, மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு நடித்து வந்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த 15 நாட்களாக, மனோபாலா கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வந்த நிலையில், மே 3-ஆம் தேதி தன்னுடைய 69 வயதில் உயிரிழந்தார். இவருடைய மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையும் பெரும் அளவு பாதித்தது. எப்போதும் துருதுருவென்று ஓடிக்கொண்டே இருக்கும் மனோ பாலா 80 வயது வரை வாழக்கூடிய ஒரு மனிதர் என்றும், அவரது இறப்பு பெரும் துயரத்தை தருவதாக பலரும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தன்னுடைய கணவர் இறந்த ஒரே வாரத்தில் மனோ பாலாவின் மனைவி உஷா செய்துள்ள செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. பொதுவாக மனோபாலாவின் குடும்ப வழக்கப்படி ஒருவர் இறந்து விட்டால், அவர்களின் உடைகள் மற்றும் உடைமைகளை தீயிட்டு கொளுத்துவது வழக்கம். ஆனால் அப்படி செய்வதை விரும்பாத மனோபாலாவின் மனைவி உஷா, தன்னுடைய கணவரின் உடைமைகள் அனைத்தையும் அனாதை ஆசிரமத்திற்கு கொடுத்துள்ளார். மேலும் கணவரின் நினைவாக ஒரே ஒரு வாட்சை மட்டுமே தன்னிடம் வைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இவரது செயலை பலரும் மனதார பாராட்டி வருகிறார்கள்.