
நடிகை மாளவிகா மோகனன், மிக குறுகிய காலத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்தவர். மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமான மாளவிகா மோகனனை, 'பேட்ட' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் அதிர்ஷ்டம் இவருக்கு கிடைத்தது.
'பேட்ட' திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவில்லை என்றாலும், இவரது கதாபாத்திரம் வலிமை மிக்கதாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'மாஸ்டர்' திரைப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்தார். 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்ததால் தளபதி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஹீரோயினாகவும் மாறினார்.
திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள, முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தால் மட்டும் போதாது என்பதால், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். மலையாளத்தில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட் அடித்தாலும், ஏனோ தமிழில் வெற்றிப்படத்தை கொடுக்க திணறி வருகிறார்.
அந்த வகையில் மாளவிகா மோகனன் தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் விமர்சன ரீதியாக அதிகம் பாராட்ட பட்டது. இந்த கதாபாத்திரத்தின் மேக்கப் போடுவதற்காக மட்டுமே 4 மணிநேரம் செலவு செய்தார். அதே போல் மேக்கப் நீக்குவதற்காக 3 மணிநேரம் செலவு செய்தார். அவ்வளவு கஷ்டங்களை தாங்கிக்கொண்டு நடித்தும், இப்படத்தில் தான் நடித்த பெரும்பாலான காட்சிகள் வரவில்லை என்பதும், படத்திற்கு தகுந்த வரவேற்பு கிடைக்க வில்லை என்பதே இவரின் ஆதங்கமாக இருந்தது.
தென்னிந்திய திரையுலகை தாண்டி, சில பாலிவுட் படங்களில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். மேலும் இவரின் கைவசம் தற்போது தெலுங்கிலும் பிரபாஸ் ஜோடியாக நடித்து வரும் ராஜா சாப் திரைப்படம் உள்ளது. மற்ற சில திரைப்படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
நடிகர் - நடிகைகள் சில வருடங்களாகவே, ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டால், அடுத்த படத்தின் ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். உள்நாட்டில் இவர்களால் சுதந்திரமாக எந்த இடங்களுக்கும் செல்ல முடிவதில்லை என்றாலும், வெளிநாடுகளில் அவர்களால் சுதந்திரமாக இருக்க முடியும் என்பதற்காகவே இப்படி செய்கிறார்கள்.
அப்போது மாளவிகா மோகனன் பாரிஸுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில், தன்னுடைய தாயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அம்மாவின் 10 வருட மனக்குமுறலை ஒருவழியாக தீர்த்துவிட்டதாகவும், அவரின் ஆசையையும் நிறைவேறி விட்டதாக கூறியுள்ளார். அதாவது பத்து வருடத்திற்கு முன்பு, ஒருமுறை மாளவிகா மோகனன் தன்னுடைய அம்மாவுடன் பாரிஸுக்கு வந்தாராம். இவர்கள் சென்ற சமயத்தில் மழை கொட்டி தீர்த்தத்தால், ஹோட்டலில் அறையை விட்டு எங்குமே செல்லமுடியாமல் போனதாம். எனவே மாளவிகாவின் அம்மா... பாரிஸுக்கு வந்து கூட பல இடங்களை சுற்றிப்பார்க்க முடியவில்லை என தன்னுடைய மனக்குமுறலை கூறினாராம்.
தற்போது 10 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அம்மாவுடன் பாரிஸுக்கு சென்றுள்ள மாளவிகா மோகனன், அம்மாவை அவருக்கு பிடித்த பல இடங்களுக்கு அழைத்து சென்று அவரின் ஆசையை நிறைவேற்றி உள்ளதாக கூறியுள்ளார். மேலும் பட பிடிப்புகள் இல்லாமல் ஓய்வில் இருக்கும் போதெல்லாம் பெற்றோருடன் இது போல் பயணம் மேற்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.