
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மாதவன், தமிழ் சினிமாவில் அலைபாயுதே படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் கொடுத்த சூப்பர் டூப்பர் ஹிட்டுக்கு பிறகு மாதவனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தது. அவரை சாக்லேட் பாயாகவும் மாற்றியது. 90ஸ் கிட்ஸ்களின் கனவு கண்ணனாக வலம் வந்த மாதவன் அடுத்தடுத்து தேர்வு செய்த படங்கள் இவரை தமிழ் சினிமாவில் நிலையான ஹீரோவாக வலம் வர வைத்தது.
அந்த வகையில், என்னவளே, மின்னலே, பார்த்தாலே பரவசம், ரன், அன்பே சிவம், ஜே ஜே என்று ஏராளமான படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் வரிசையாக ஹிட் கொடுத்த மாதவனுக்கு அடுத்தடுத்த சில படங்கள் தோல்வி பயத்தை காட்டியது. காலில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக... 4 வருடங்களுக்கு மேல் திரையுலகிய விட்டு ஒதுங்கிய மாதவன், சில பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார்.
தமிழில் வெயிட்டான கம் பேக் கொடுக்க காத்திருந்த இவருக்கு, இறுதிச் சுற்று படம் தரமான வெற்றியை கொடுத்தது. இதன் பின்னர் ராக்கெட்ரி:தி நம்பி எஃபெக்ட் என்ற படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் ரோலில் நடித்தார். இந்தப் படத்தை அவரே இயக்கவும் செய்திருந்தார். இந்தப் படத்திற்கு அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.
இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் பயோபிக் படத்தில் நடிக்கிறார் மாதவன். மறைந்த விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் ஜிடி நாயுடுவாக மாதவன் நடிக்கிறார். ஏற்கனவே இந்த தகவல் வெளியான நிலையில், தற்போது இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு ஜிடிஎன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட் படத்தை தயாரித்த Tricolours Entertainment Pvt Ltd, Varghese Moolan Pictures, Mediamax Productions ஆகிய நிறுவனங்கள் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. ஜிடிஎன் படத்தில் மாதவன் உடன் இணைந்து ஜெயராம், யோகி பாபு, பிரியாமணி ஆகியோர் பலர் நடிக்கின்றனர். கோயம்புத்தூரில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு 95 சதவீதம் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜிடிஎன் படத்தின் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் முரளிதரன் சுப்ரமணியம் கூறுகையில், ஜிடிஎன் படத்தின் 95 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தின் பெரும்பாலான பகுதிகள் கலாச்சாரத்தை பின்னணியாக கொண்ட இடங்களில் எடுக்கப்பட்டுவிட்டது.
இந்தப் படம் ஜிடி நாயுடுவின் தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த வாழ்க்கையை பற்றிய படம். இந்த படத்திற்காக டைரக்டரும் அவரது டீமும் கிட்டதட்ட 5 ஆண்டுகள் ரிசர்ச் செய்த பிறகு தான் படத்தின் கதையை உருவாக்கி, ஷூட்டிங் வேலைகளை துவக்கி உள்ளனர் என்றார்.
மாதவனை தேர்வு செய்தது ஏன்? என்கிற கேள்விக்கு... இந்தியாவின் எடிசன் என்றும், கோவையின் செல்வ உற்பத்தியாளர் என்றும் போற்றப்படும் ஜி.டி.நாயுடு, பல கண்டிபிடிப்புக்களை நாட்டிற்கு அளித்துள்ளார். இந்தியாவில் முதல் மின் மோட்டாரை தயார் செய்தவர் இவர் தான். இவரது கதையில் நடிப்பதற்கு யார் பொருத்தமாக இருப்பார் என யோசித்த போது, ராக்கெட்ரி படத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாதவன் தான் நினைவிற்கு வந்தார் என்றார். இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வந்தா இசையமைக்கிறார். இந்தியாவில் எடுக்கப்படும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.