
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான படம் ‘கூலி’. இப்படத்துக்கு கடும் எதிர்மறை விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இதனைத் தாண்டி அனைத்து மாநிலங்களிலும் நல்லபடியாக படம் வசூல் செய்து வருகிறது. இதனால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் கூலி படத்தின் சொதப்பல்களால் இயக்குநர் மணிரத்தினம் போல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறி வைக்கப்பட்டுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் ஹரிஹர சுதன் தங்கவேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர், ‘‘இயக்குனர் அன்பின் லோகேஷ் அவர்களே, தமிழ் மக்கள், சினிமா கதாநாயகர்களை வழிபடுபவர்கள், அன்பிற்கும் அடுத்த கட்டமாய் வெறிகொள்பவர்கள் என்றெல்லாம் தமிழ் சமூகத்தின் மீது ஒரு கட்டமைப்பு உண்டு. இது முழுவதும் உண்மை இல்லை, இத்தனை செய்த மக்கள் திரைப்படத்தின் மீதான ‘நம்பிக்கை’ என்ற ஒன்றை சூப்பர் ஸ்டார் உட்பட எந்த நாயகன் மீதும் வைப்பதில்லை. இது காலம் காலமாக இயக்குனர் வசம் மட்டுமே உள்ளது. சி.வி. ஸ்ரீதரில துவங்கி பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம், பாக்யராஜ், செல்வராகவன், பாலா, ஷங்கர், வெற்றிமாறன், மிஸ்கின் என மிக அரிதாகவே இந்த நம்பிக்கை பட்டியல் இருக்கும், காரணம் ஒன்று தான் - எந்த நாயகனை இவர்களிடத்தில் கொடுத்தாலும் அது இவர்கள் படமாகவே இருக்கும்.
இதே நம்பிக்கையை மக்கள் ஒரே ஒரு நாயகன் மீது வைப்பார்கள் என்றால் அது உலக நாயகன் மட்டுமே. அதற்கு காரணமும் இதே இயக்குனர் லாஜிக்தான். ஒரு நாயகனாக வரிசையாக ஆயிரம் தோல்விப் படங்கள் கொடுத்து விட்டு, ஒரு வெள்ளைப் பக்கத்தில் ஒரு புள்ளி மட்டும் வைத்து, அதற்கு கீழே வசனம், இயக்கம் கமலஹாசன் என்றிருந்தால் எடுக்கப்படும் முன்பே அது வரலாறு.
இவர்களுக்குப் பிறகு தமிழ் சினிமா இந்த அன்பை, நம்பிக்கையை உங்களுக்குத் தந்தது. காரணம், உங்கள் கான்பிடன்ஸ். இவர் எதற்கும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளக்கூடிய ரகம் இல்லை. ஹாலிவுட் அதிரடி சினிமாக்களின் பால் அதீதம் ஈர்க்கப்பட்டவர், பறக்கும் சண்டை இருக்காது. பாடல்களை விட பின்னணி இசையை விரும்பக்கூடியவர். திரைக்கதையின் முக்கிய உத்திகளை ஒரு ரசிக பாணியில் சுவாரசியமாகத் தரக்கூடிய ஒரு குட்டிக் குவென்டின். காசு, பணத்தைவிட ஒரு ரசிகனின் கொண்டாட்டத்தை மதிக்கக் கூடியவர். ஆகவே தான் போதை, ரத்தம், வன்முறை, துப்பாக்கி என நீங்கள் டார்க் உலகைக் கையாண்டாலும் லோகி, லோகி என குழந்தைகள் கூட உங்களைக் கொண்டாடினார்கள்.
இந்த மரியாதை ரசிகர்களிடத்தில் மட்டுமல்ல. சினிமா வட்டாரத்திலும் உண்டு. ஆகவேதான் 170 படங்களுக்கு மேல் நடித்த சூப்பர் ஸ்டார் கூட, ‘கூலிகளுக்கு ஒண்ணுன்னா’ என டயலாக் பேசிக்கொண்டே நான் ஏன் கொலை செய்யப்பட்ட இத்தனை பேரை இரவு, பகலாக வெட்டியான் போல எரிக்கிறேன் என கேள்வி கேட்கவில்லை. அப்படியானால் இதில் நாயகனுக்கும் கொலையில் உடன்பாடு உண்டு என்றுதானே வரும். ஆக, ப்ரீத்தியும், நாயகனும் காசுக்காக இத்தனை பேரை கொல்கிறார்கள் அல்லது துணை போகிறார்கள். அப்பா சத்யராஜும் அப்படிதான். இது தவறில்லையா? ஒரு குடும்பமாக இப்படி செய்யும் கிரிமினல்களுக்கு ஒன்று நிகழும் போது பார்வையாளன் அவர்களுக்காக எப்படி வருந்துவான்? படத்தில் நடிக்கும் போது இதெல்லாம் ரஜினியோ, ஸ்ருதியோ, சத்யராஜோ யோசித்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறீர்களா? இருந்தும் நடித்திருக்கிறார்கள். காரணம், உங்கள் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை.
4000 கோடி அளவில் ஆர்கன் திருடும் கும்பலுக்கு பிணங்களை மறைக்க ஒரு மின் இயந்திரம் வேண்டும் எனில் சும்மா திரியும் நமது மின் ஊழியர்களை கேட்டாலே இரும்பை உருக்கும் அளவு செய்து விடுவார்களே. வேலை முடிந்ததும் அதிலேயே அவர்களை தள்ளி எரித்து விட வேண்டியதுதானே. அதெல்லாம் முடியாது சார். சத்யராஜ் ஏரிசேரை கண்டுபிடிக்கிறார் அதுதான் கதை என்றால் திரைக்கதையில் அதை சரி செய்வதுதானே. அரசு கையகப்படுத்திய எரிசேரை மகன் மூலமாகத் திருடி தனது க்ளீனிங் வேலைகளுக்கு பயன்படுத்துகிறது கும்பல். ஒரு கட்டத்தில் அந்த சேர் எரிந்து போகிறது. இப்போது புதியது வேண்டும். அதற்காக அதைக் கண்டுபிடித்த சயின்டிஸ்ட் வீட்டைக் குறி வைக்கிறது கும்பல். உயிரே போனாலும் அந்த சேரை மீண்டும் உருவாக்க மாட்டேன் என்கிறார் சத்யராஜ்.
ஒரு மகளைக் கொல்கிறார்கள். ‘‘போடா மயிறு. எங்கள் அனைவரையும் கொன்றாலும் நான் செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன்’’ என அறத்தின் பால் நிற்கிறார். அப்போதுதான் முதல் சேர் விபத்து தானாக நிகழவில்லை, தனது கண்டுபிடிப்பு தவறாக பயன்படுத்தப்படுவது தெரிந்து சத்யராஜ் தான் முதல் விபத்தை நிகழ்த்தினார் எனத் தெரிந்து சத்யராஜை அடித்தே கொல்கிறார்கள். அவர் இறக்கும் போது நண்பனின் பெயரை சொல்கிறார். இப்படி அவர் இறந்திருந்தால் தானே அவர் மீது ஒரு பரிதாபம் தோன்றும்.
பிறகு ஹீரோ, ஸ்பைடர் மேனாய் இருந்தாலும், ஜான் விக்காய் இருந்தாலும், நோபடி பாபாய் இருந்தாலும், பிபி வால்டர் வொயிட்டாய் இருந்தாலும் அவர்கள் உண்மைத்தனத்தை வெளிப்படுத்தாத டொக்கு பீஸாய் தானே அறிமுகம் இருக்க வேண்டும். பேரன், மனைவி, மருமகளிடம் அசிங்கப்பட்டு ஒரு தேங்காய் சட்னிகூட கிடைக்காத அவமானத்துடன் வாழ்பவர் தானே ஜெயிலரும்! அப்போதுதானே அவர்கள் எழுச்சி மிரட்டலாய் இருக்கும். ஆனால், சூப்பர் ஸ்டாரை அனைவரும் கொண்டாடும் மரியாதை மிகு சூப்பர் ஸ்டாராக அறிமுகம் செய்து, சூப்பர் ஸ்டாராகவே முடிப்பதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே. அதற்கு எதற்கு லோகேஷ்?
இன்னும் ஒரு வாரத்தில் விடுதலை ஆக இருக்கும் ஒரு டொக்கு தாதாவிற்கு நண்பன் கொல்லப்பட்ட செய்தி கிடைக்கிறது. அன்றிரவே தப்பிக்கிறார். அவர் தப்பித்த பிறகு அவனது பைல்களைப் படித்துத்தான் தப்பித்தவன் எவ்வளவு சக்தி வாய்ந்தவன் எனத் தெரிய வருகிறது. நண்பனைக் கொன்றவனை கொல்ல வேண்டும் என வருபவனுக்கு இந்த கும்பலின் ஆர்கன் கொடூரம் தெரிய வந்து ஒற்றை ஆளாக மொத்தமாக அழிக்கிறான். இதில் தனது மகளையும் கண்டுகொள்கிறான். அவளைக் காப்பற்ற இறுதியில்தானும் இறந்து போகிறான். சோக மியூசிக். அப்பொழுது அவனது பைல்களின் இறுதியில் எழுதப்பட்டு இருக்கும் pseudocide - என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடுகிறார்கள் . Faked death specialist என வருகிறது. ஏதோ ஒரு நாட்டில் பவர் ஹவுஸ் சரக்கை ஒருவன் திறக்கிறான். முடிந்தது.
இது பதிவு எழுதும் போது நான் புனைந்த ஒரு வெற்றுக் கதை. கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இயக்குனர் குழுவால் இது விவாதிக்கப்பட்டு அக்கு அக்காக பிரிக்கப்பட்டு பழுது பார்க்க வேண்டும். இது போல ஆயிரம் கதைகள் உருவாக்கப்பட்டு, நிராகரிக்கப்பட வேண்டும். அதுதான் கதை விவாத மெனக்கெடல். ஆனால், கூலியில் முக்கியக் கதை மாந்தர்கள் கொலைக்கு துணை போகிறார்கள். இரண்டாம் பாதி முழுக்க நாய் சங்கிலி ஒன்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு ஒருவன் பைக், ரயில் என துரத்திக் கொண்டே இருக்கிறான். இதை இயக்குனர் குழுவில் ஒருவர் கூட எதிர்க்கவே இல்லையா? இல்லை அந்த சுதந்திரம் அவர்களுக்கு இல்லையா? அதெல்லாம் இருக்கிறது. உங்கள் மீது கொண்ட அன்பினால் அவர்கள் கேள்வியே கேட்கவில்லை என்றால் குச்சியால் சாத்த வேண்டியது முதலில் அவர்களைத்தான்!
பிறகு வில்லன் பாத்திரம். எவ்வளவு வலிமையாக இருந்திருக்க வேண்டும். தன் நோக்கத்தை எதிர்ப்பவன் பேட்மேனாக இருந்தாலும் வாடா வெண்ணை என முதுகெலும்பை உடைத்து குழிக்குள் போட்டால் தானே Bane. ஹீரோவை கதற அழுக வைத்தால் தானே ஜோக்கர். வில்லன்களிடம் நாயகர்கள் படும் அந்த sufferingம் அதில் இருந்த மீள்தலும் தானே நாயகனை ஹீரோவாய் மாற்றுகிறது. அந்த Suffering தான் அண்ணாமலை, பாட்ஸா, முத்து , மகாநதி, தில் - இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்தது தானே. கூலியில் நாயகனால் தான் Suffering தவிர, அவருக்கு ஒன்றும் ஆவதில்லை.
வில்லனை சக்தி வாய்ந்தவனாய் காட்டுவதற்கும், குரூரமாய் காட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளது. மார்க் ஆண்டனி என்ன சுத்தியலால் மண்டையைப் பிளந்தா ஆக சிறந்த வில்லனானார்? வில்லன்கள் மதி நுட்பம் நிறைந்தவர்கள். எவன் தடுத்தாலும் தன் நோக்கத்தை செயல்படுத்துவார்கள். படத்தின் கதாநாயகன் மித்ரன் ஐபிஎஸ் என்றால் நினைவிற்கு வராது. வில்லன் சித்தார்த் அபிமன்யூ என்றால் தான் படமே நினைவிற்கு வரும். இப்படியெல்லாம் காலத்தால் அழியாத வில்லன்களை உருவாக்கும் திறமையும், காலமும், வாய்ப்பும் இருந்தும் ஏன் லோகேஷ் இப்படி?
அப்படி என்றால் கூலி வேஸ்ட்டா என்றால், கிடையாது. பிளாஷ்பேக் ரெட்ரோ பகுதி மாஸ். அனைவரையும் அடித்து விட்டு பஸ் இருக்கையில் ரஜினி அமரும் அந்த காட்சி தமிழ் சினிமாவின் one of the best மாஸ் காட்சி. மிரண்டு விட்டேன். மொத்த படத்தையும் தூக்கி விட்டு வெறும் லூப் மோடில் இந்த நிமிடங்களை மட்டும் மூன்று மணி நேரம் காட்டினாலும் தகும் அளவு மொத்த டீமும் உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். கதையைத் தவிர படத்தின் ஒளிப்பதிவு, இசை, பாடல், நடனம் என அனைத்தும் தரம். இதனால் தான் உங்களை முழுவதுமாய் ஏற்கவும் முடியவில்லை, நிராகரிக்கவும் முடியவில்லை. இரவு முழுவதும் புலம்பிக் கொண்டே திரிகிறோம்.
உலக நாயகனை லோகேஷின் நாகயனாய் காட்சிப்படுத்த முடிந்த உங்களால், சூப்பர் ஸ்டாரை உங்கள் நாயகனாய் காட்சிப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. கூலி உங்களின் பலவீனமான படைப்பு, இதனால் சிறிய ஏமாற்றமே தவிர பெரிய இழப்பெல்லாம் ஒன்றும் இல்லை. ஒரு இயக்குனரின் தோல்விக்கு பல இயக்குனர்கள் பார்ட்டி வைத்து கொண்டாடுவது தான் தமிழ் சினிமா வழக்கம். ஆனால் நான் பேசிய வரை பல இயக்குனர்கள், துணை இயக்குனர்களால் உங்களிடத்தில் இருந்து இந்த சராசரி படைப்பை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இவரே பண்ணலைன்னா பின்ன யார்தான் பண்ணுவா என உங்கள் மீதான அன்பில் புலம்புகிறார்கள்.
வெறுப்பு இல்லாத இந்த விமர்சனங்கள் நிச்சயம் வரவேற்க வேண்டியவையே... We still strongly beleive in you. எங்கு மிஸ் ஆகியது, எது தவறு? என விவாதியுங்கள். ஒரு குழுவாக பவர் ஹவுஸை போட்டுவிட்டு மீண்டு வாருங்கள். இந்திய சினிமாவின் ஆக சிறந்த வில்லன்களை உருவாக்குங்கள். நாயகர்கள் அவர்களாகவே உருவெடுப்பார்கள். அப்புறம் இந்த பரத்வாஜ் ரங்கனின் சேர்க்கையை நிறுத்துங்கள். தவறை தவறென சொல்பவர்களை நம்புங்கள். பரத்வாஜ் சிலாகித்து, தூக்கி வைத்து பேசி முடித்த லிஸ்டில் மணி ரத்தினத்திற்கு பிறகு உங்களை குறிவைக்கிறார். மொட்டையில் வழுக்கி விடாதீர்கள்’’ என எச்சரித்துள்ளார்.