லால் சலாம் படத்தின் ஹார்டு டிஸ்க் தொலைந்துபோனதைப் போல் தற்போது மேலும் ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தின் காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க் திருடு போய் உள்ளது.
சினிமா டிஜிட்டல் மயம் ஆக்கப்பட்ட பின்னர், பிலிம் கேமரா சுத்தமாக ஒழிந்துவிட்டது. தற்போது படங்கள் அனைத்தும் டிஜிட்டல் கேமராவில் தான் படமாக்கப்படுகின்றன. கேமராவில் படமாக்கப்படும் காட்சிகளை ஹார்டு டிஸ்கில் சேமித்து வைத்து படக்குழுவினர் பயன்படுத்தி வருகின்றனர். சில சமயங்களில் அந்த ஹார்டு டிஸ்குகள் தொலைந்துபோவது உண்டு. அப்படி கடந்த ஆண்டு ரஜினி நடித்த லால் சலாம் படத்தின் காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க் தொலைந்துபோனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவித்தார். அதுவே அப்படத்தின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் மற்றுமொரு படத்தின் ஹார்டு டிஸ்கும் தற்போது திருடு போய் இருக்கிறது.
24
100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் கண்ணப்பா
அந்த படத்தின் பெயர் கண்ணப்பா. தெலுங்கு நடிகர் மஞ்சு விஷ்ணு நடித்து, தயாரிக்கும் இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. விஷ்ணுவுடன் பிரபாஸ், அக்ஷய் குமார், மோகன்லால், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கண்ணப்பா படத்தின் வெளியீட்டிற்கு முன்பே சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்க் திருடு போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
34
கண்ணப்பா பட ஹார்டு டிஸ்க் திருட்டு
கோகாபேட்டை பகுதியைச் சேர்ந்த ரெட்டி விஜயகுமார், ‘24 ஃப்ரேம்ஸ் ஃபேக்டரி பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தில் நிர்வாக தயாரிப்பாளராக பணிபுரிகிறார். மும்பையில் உள்ள ஹைவ் ஸ்டுடியோவில் இருந்து கண்ணப்பா படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்கை கொரியர் மூலம் பிலிம் நகரில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளார். மே 25 ஆம் தேதி, அலுவலகத்தில் பணிபுரியும் ரகு என்ற பணியாளர் பார்சலை பெற்றுக் கொண்டார். ஆனால், இதை யாரிடமும் சொல்லாமல், சரிதா என்ற பெண்ணிடம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அதன் பிறகு ரகுவும், சரிதாவும் தலைமறைவாகிவிட்டனர். இதனால் விஜயகுமார் போலீசில் புகார் அளித்தார். தங்கள் படத்திற்கு வேண்டுமென்றே நஷ்டம் ஏற்படுத்தும் நோக்கில் இந்த திருட்டு நடந்ததாக அவர் குற்றம் சாட்டினார். பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹார்டு டிஸ்க் திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்ணப்பா படத்தின் முக்கிய டேட்டா அடங்கிய ஹார்டு டிஸ்க் திருடு போனதால் படத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று படக்குழு அச்சம் தெரிவித்துள்ளது.