டிசம்பர் 31 ஆம் தேதி தன்னுடைய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என தெரிவித்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய உடல் நிலை காரணமாக கட்சி துவங்க வில்லை என்பதை அதிகார பூர்வமாக அறிவித்து ரசிகர்களுக்கும், ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் எப்படியாவது சூப்பர் ஸ்டாரை அரசியல் பாதைக்கு அழைத்து வர வேண்டுமென வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரசிகர்களின் செயலால் அதிருப்தி அடைந்த ரஜினிகாந்த் இனி எப்போதும் அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்தார்.
அதன் பின்னர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 4 பேர் திமுகவின் இணைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஜினி தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில், ரசிகர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என்றும், அதற்கு முன்பு ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்யும் படி உத்தரவிடப்பட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இனி அரசியலுக்கு வரவே மாட்டாரோ? என ரசிகர்கள் கலக்கி போய் இருக்கும் இந்த சமயத்தில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக பேச்சு கிளம்பியுள்ளது.
ரஜினியின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகனுடன் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம் நடத்தியுள்ளார்.
அப்போது அப்பா ரஜினிகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டும் என்றும், அம்மா லதா ரஜினிகாந்த் ஆரம்பிக்க உள்ள புதிய கட்சி வெற்றி பெற வேண்டும் என்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களில் லதா ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.