
தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் குபேரா. இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தனுஷும் ராஷ்மிகாவும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளது இதுவே முதன் முறை ஆகும். இப்படத்தில் வில்லனாக நடிகர் நாகார்ஜுனா நடித்திருக்கிறார். இப்படத்தை அமீகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் சுனில் நாரங் மற்றும் புஸ்கூர் ராம்மோகன் ராவ் ஆகியோர் உடன் சேகர் கம்முலாவும் இணைந்து தயாரித்து உள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். குபேரா திரைப்படம் ஜூன் 20ந் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
குபேரா திரைப்படத்தை 90 கோடி பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் படப்பிடிப்பு நாட்கள் போகப் போக அதிகரித்ததால் இப்படத்தின் பட்ஜெட்டும் அதிகரித்தது. அதன்படி இப்படத்திற்கு கூடுதலாக 30 கோடி செலவாகி இருக்கிறதாம். மொத்தமாக 120 கோடி பட்ஜெட்டில் குபேரா திரைப்படம் உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் தனுஷின் கெரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் குபேரா தான். இப்படத்தில் நடிக்க நடிகர் தனுஷுக்கு அதிகளவில் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாம். அதேபோல் ராஷ்மிகா, நாகார்ஜுனா ஆகியோரும் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்கிற விவரம் வெளியாகி இருக்கிறது.
குபேரா திரைப்படத்தில் நடிகர் தனுஷ் தேவா என்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார். இப்படத்தில் அவர் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்துள்ளார். திருப்பதியில் நடுரோட்டில் இயக்குனர் சேகர் கம்முலா தன்னை பிச்சை எடுக்கவிட்டதாக குபேரா பட ஆடியோ லாஞ்சில் நடிகர் தனுஷே கூறி இருந்தார். அதுமட்டுமின்றி இப்படத்திற்காக நடிகர் தனுஷ் உடல் எடையை குறைத்து நடித்திருக்கிறார். தன்னுடைய கெரியரில் தன்னைப் பார்த்து உடல் எடையை குறைக்க சொன்ன ஒரே இயக்குனர் சேகர் கம்முலா தான் என தனுஷ் பேசி இருந்தார். குபேரா படத்திற்காக நடிகர் தனுஷுக்கு ரூ.30 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். இப்படத்தில் நடித்தவர்களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்றால் அது தனுஷ் தான்.
குபேரா படத்தில் தனுஷுக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்றால் அது நாகார்ஜுனாவின் கேரக்டர் தான். அவர் இப்படத்தில் ஒரு கார்பரேட் முதலாளியாக நடித்திருக்கிறார். தமிழில் தோழா படத்துக்கு பின்னர் அவர் நடிக்கும் படம் குபேரா தான். இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் நாகார்ஜுனா. குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசுகையில், தானும் சென்னையில் தான் பிறந்து வளர்ந்ததாக கூறிய நாகார்ஜுனா, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தான் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்ததாக தெரிவித்தார். அவருக்கு குபேரா படத்தில் வில்லனாக நடிக்க ரூ.20 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
குபேரா படத்தில் நாயகியாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, தற்போது பான் இந்தியா அளவில் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். இவர் கடைசியாக பாலிவுட்டில் சல்மான் கான் ஜோடியாக நடித்த சிக்கந்தர் படத்திற்காக ரூ.15 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார். ஆனால் அதைக் காட்டிலும் குபேரா படத்திற்கு மிகவும் கம்மியான சம்பளம் மட்டுமே வாங்கி இருக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகாவுக்கு ரூ.5 கோடி மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். சிக்கந்தர் படத்திற்கு முன்னதாகவே குபேராவில் நடிக்க கமிட்டாகிவிட்டார் ராஷ்மிகா. குபேரா இசை வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா மந்தனா பேசும்போது, தனுஷ் உடன் முழு நீள ரொமாண்டிக் படத்தில் நடிக்க தான் ஆசைப்படுவதாக கூறினார்.
தெலுங்கு திரையுலகில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளவர் சேகர் கம்முலா. இவர் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். இவர் குபேரா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு சராசரியாக ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குவாராம். ஆனால் குபேரா படத்திற்காக அவர் சம்பளம் வாங்கவில்லை என கூறப்படுகிறது. ஏனெனில் இப்படத்தில் அவரும் ஒரு தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதால் படத்தின் லாபத்தில் இருந்து பங்கு எடுத்துக் கொள்வாராம்.
குபேரா திரைப்படத்தை நம்பி தான் கோலிவுட்டே உள்ளது. ஏனெனில் ஜூன் மாதம் கமலின் தக் லைஃப் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால், திரையரங்குகள் கூட்டமின்றி வெறிச்சோடி காட்சியளிக்கின்றன. இதனால் குபேரா படம் மூலம் மீண்டும் கல்லாகட்ட காத்திருக்கிறார்கள். குபேரா படம் வேறலெவலில் இருப்பதாக படம் பார்த்த சிலர் கூறி வருகிறார்கள். ஒருவேளை இப்படம் கிளிக் ஆனால் பாக்ஸ் ஆபிஸில் நிச்சயம் 200 கோடிக்கு மேல் அசால்டாக வசூல் அள்ளிவிடும் என கூறப்படுகிறது. அது மட்டும் நடந்தால் நடிகர் தனுஷ் கேரியரில் அதிக வசூல் அள்ளிய படமாக குபேரா இருக்கும். தற்போதைக்கு அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ராயன் திரைப்படம் தான் அதிக வசூல் அள்ளிய படமாக இருந்து வருகிறது. அப்படம் ரூ.150 கோடி அள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது.