கொரோனா பரவலால் பழம் பெரும் மற்றும் திறமையான கலைஞர்கள் பலரையும் திரையுலகம் இழந்து தவித்து வருகிறது.2020ம் ஆண்டு கொடுத்த பேரதிர்ச்சிகளே போதும் என ரசிகர்கள் எண்ணி இருந்த சமயத்தில், முதல் படம் வெளியாகும் முன்பே அறிமுக ஹீரோ உயிரிழந்த சம்பவம் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் சிவக்குமார் சாக்ஷினி புரொடக்சன் சார்பில் தயாராகி வரும் திரைப்படம் திருமாயி, சாலோமோன் கண்ணன் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் தேனி பாலா என்பவர் ஹீரோவாக நடித்துள்ளார்.
தேனி அருகே உள்ள சீவலம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் ராம்சந்த். சினிமாவுக்காக தேனி பாலா என்று மாற்றிக் கொண்டார். தொடக்கத்தில் இயக்குனர் கலைப்புலி சேகரனிடம் உதவியாளராகப் பணியாற்றினார்.
ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த தேனி பாலா, முதன் முறையாக திருமாயி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவருக்கு, ரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேனி பாலா, கடந்த 14ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 43 வயதே ஆன பாலாவிற்கு செல்வி என்ற மனைவியும், பரிமளா தேவி என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர்.