கன்னட திரையுலகில் இப்படியொரு பிரம்மாண்டமா? என ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் எழுதி, இயக்கிய இந்தப்படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்பட பிரபல கன்னட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி தந்தது, இதனால் 2வது படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.
தற்போது கே.ஜி.எஃப் சாப்டர் 2 என்ற பெயரில் 2வது பாகத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் இரண்டாம் பாகத்தில் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
நாயகன் யஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேஜிஎஃப்2 திரைப்படத்தின் டீசர் கடந்த 7ஆம் தேதி வெளியாகி இருந்தது.100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து இந்திய அளவில் சாதனை படைத்த அந்த டீசரில் படக்குழுவினருக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகியுள்ளது.
டீசரில் இறுதியில் யஷ் ஒரு போலீஸ் ஸ்டேஷன் முன்பு நிற்கும் போலீஸ் வாகனத்தை பெரிய துப்பாக்கி மூலம் சுட்டு வீழ்த்துவார். முழுமையாகக் குண்டுகள் காலியானவுடன், அந்தத் துப்பாக்கியின் சூட்டில் சிகரெட்டைப் பற்றவைப்பார். இந்த காட்சி தற்போது பிரச்சனையை உருவாக்கியுள்ளது.
இதற்கு கர்நாடக மாநிலத்தின் புகையிலை ஒழிப்புப் பிரிவும், சுகாதாரத் துறையும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இந்தக் காட்சியில் சிகரெட் புகைப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை. இது சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விளம்பரத்துக்குத் தடை விதிக்கும் சட்டத்தின் 5ஆவது பிரிவை மீறிய செயல் என்பதால் அந்த டீசரை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.