கன்னட சினிமா என்றாலே ரீமேக் படங்கள் தான் என்கிற காலம் போய், கன்னட படங்களை பிற மொழிகளில் ரீமேக் செய்யும் காலம் வந்துவிட்டது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள் பெரும்பாலானவை கன்னட திரையுலகில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளன. இதனால் டம்மியாக இருந்த அந்த திரையுலகிற்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது யாஷ் நடித்த கே.ஜி.எஃப் தான்.
கன்னட சினிமாவின் வளர்ச்சியை கே.ஜி.எஃப்.புக்கு முன், பின் என பிரித்துவிடலாம். அந்த அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது அப்படம். பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசாகி மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை அதைவிட பிரம்மாண்டமாக எடுத்து கடந்தாண்டு உலகமெங்கும் ரிலீஸ் செய்தனர்.
கே.ஜி.எஃப் படங்களின் மூலம் இந்திய முழுவதும் பேமஸ் ஆகி பான் இந்தியா ஸ்டார் ஆக உருவெடுத்த யாஷ், அப்படத்திற்கு முன் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் பெரும்பாலானவை ரீமேக் படங்கள் தான். அவர் நடித்த ரீமேக் படங்களில் களவாணியும் ஒன்று. தமிழில் விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன களவாணி திரைப்படம் கன்னடத்தில் கிராதகா என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
களவாணி படத்தின் கன்னட ரீமேக் ஆன கிராதகா திரைப்படத்தில் யாஷ் தான் நாயகனாக நடித்திருந்தார். தமிழில் நடித்த ஓவியா, அதன் கன்னட ரீமேக்கிலும் யாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த 2011-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் தமிழைப் போல் கன்னடத்திலும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. கிராதகா படத்தில் நடித்தபோது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை பார்த்த நெட்டிசன்கள், களவாணி ரீமேக்கில் யாஷ் நடித்துள்ளாரா என ஆச்சர்யத்துடன் பார்த்து வருவதோடு, இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே என வியப்புடன் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... மினி கோடம்பாக்கமாக மாறிய அகமதாபாத் ஸ்டேடியம்... ஐபிஎல் பைனல்ஸை படையெடுத்து வந்து பார்த்த கோலிவுட் பிரபலங்கள்