Kattalan Movie Review : காட்டின் பின்னணியில் ஒரு 'KGF' பாணி வேட்டை - 'காட்டாளன்' எப்படி இருக்கு?

Published : May 28, 2026, 04:34 PM IST

Kattalan Movie Review : ஆண்டனி வர்கீஸ் நடிப்பில், காட்டை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் திரைப்படமாக 'காட்டாளன்' வெளியாகியுள்ளது. விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட இப்படம், தொழில்நுட்ப ரீதியாக மிரட்டினாலும், திரைக்கதையில் சில குறைகளைக் கொண்டுள்ளது.

PREV
18
பான் இந்தியா திரைப்படம்

மலையாள திரையுலகில் சமீபகாலமாக பான்-இந்தியா அளவில் முத்திரை பதிக்கும் பல தரமான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், முழுக்க முழுக்க கேங்ஸ்டர் பாணியில், காட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் 'காட்டாளன்'. அறிமுக இயக்குனர் பால் ஜார்ஜ் இயக்கத்தில், கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ஷெரீப் முகம்மது தயாரித்துள்ள இப்படம் இன்று (28-05-2026) தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக உலகமெங்கும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் லெனின் (ஜி.எஸ்.சினிமா இன்டர்நேஷனல்) இப்படத்தை வெளியிட்டுள்ளார்.

28
துஷாராவின் மலையாள என்ட்ரி

'அங்கமாலி டயரீஸ்' புகழ் ஆண்டனி வர்கீஸ் கதாநாயகனாகவும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை துஷாரா விஜயன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் மூலம் துஷாரா விஜயன் மலையாள சினிமாவில் தனது புதிய கணக்கைத் தொடங்கியுள்ளார். சரி, காட்டை நடுங்க வைக்க வந்த இந்த 'காட்டாளன்' ரசிகர்களைக் கவர்ந்தானா? இதோ முழுமையான அலசல்!

38
கதைக்களம்

காட்டின் பின்னணியில் நடக்கும் கடத்தல் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களை மையமாகக் கொண்டது தான் இத்திரைப்படம். மாரி (சுனில்) சிறுவயதிலிருந்தே காட்டில் சட்டவிரோதமாக யானைகளைக் கொன்று, அதன் தந்தங்களை இலங்கைக்குக் கடத்தும் ஒரு கொடூரமான கடத்தல் மன்னன். தன்னை எதிர்ப்பவர்களையும், லாபத்தில் பங்கு கேட்பவர்களையும் இரக்கமின்றி கொன்று குவிக்கும் குணம் கொண்டவர். சுமார் 40 வேட்டைக்காரர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அவர்களை அடிமைகள் போல் நடத்துகிறார். இதனால் மாரியின் கொடுமைகளுக்குப் பயந்து, அவரை வீழ்த்த சமயம் பார்த்துக் காத்திருக்கிறார்கள் சில வேட்டைக்காரர்கள்.

மறுபுறம், மாரியின் எதிரி கோஷ்டியான 'எடி கேங்' காட்டின் கடத்தல் சாம்ராஜ்யத்தைக் கைப்பற்ற முயல்கிறது. இந்தச் சூழலில் தான் ஒற்றை ஆளாக, எதற்கும் அஞ்சாத 'ராக்கி பாய்' பாணியில் மாஸாக என்ட்ரி கொடுக்கிறார் நாயகன் ஆண்டனி. மாரியின் பல கடத்தல் திட்டங்களுக்கு ஆண்டனி பக்கபலமாக நிற்க, மாரியின் அடிமைத்தனத்தில் இருந்து தப்பிக்க நினைக்கும் வேட்டைக்காரர்கள் அவரை வீழ்த்த ஆண்டனியின் உதவியை நாடுகிறார்கள். அதன் பிறகு நடக்கும் அதிரடி திருப்பங்களும், ஆக்ஷன் காட்சிகளும் தான் மீதிக்கதை!

48
நடிப்பு மற்றும் இயக்கம்

படத்தில் மாரியாக வரும் சுனில், வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். தந்தக் கடத்தல் தலைவனாக அவருக்கு இது அல்வா சாப்பிடுவது போன்ற கதாபாத்திரம் என்றாலும், ஆங்காங்கே 'புஷ்பா' படத்தின் பாதிப்பு அதிகமாகவே தெரிகிறது. நாயகன் ஆண்டனி வர்கீஸ், 'பேச்சு குறைவு, செயல் அதிகம்' என்ற பாணியில் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியுள்ளார். குறிப்பாக இடைவேளைக் காட்சியில் இறந்த உடல்களுக்குள் தந்தங்களை மறைத்துக் கடத்தும் காட்சியும், அப்போது போலீஸ் வரும்போது ஏற்படும் திருப்பமும் படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.

சித்திக், கபீர் சிங், பர்த் திவாரி, ராஜ் திரன்தாசு, ஆன்சன் பால், ஹரிஷங்கர் நாராயணன் மற்றும் சந்தீப் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே தங்களுக்குக் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர். மேலும், உரிய அனுமதியோடு துன்புறுத்தப்படாமல் பயன்படுத்தப்பட்ட 'பெப்ஸி' மற்றும் 'எகசெட்' ஆகிய இரு நிஜ யானைகளும் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களாக வலம் வருகின்றன.

58
தொழில்நுட்பக் குழு

படத்தின் மிகப்பெரிய பலம் ரேனா திவேயின் ஒளிப்பதிவு மற்றும் சண்டைக் காட்சிகள் தான். காட்டின் அழகையும், அதன் ஆபத்துகளையும் கேமராவில் கச்சிதமாகப் படம்பிடித்துள்ளனர். ஷமீர் முகம்மதுவின் படத்தொகுப்பு விறுவிறுப்பைக் கூட்ட முயன்றுள்ளது. 'கேஜிஎப்' புகழ் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசையில் ஆங்காங்கே மாஸ் ஏற்றினாலும், படம் முழுவதும் 'KGF ஹாங்கோவர்' அதிகமாகவே ஒலிக்கிறது.

68
நிறை-குறைகள்

நிறைகள்:

• படத்தின் தொழில்நுட்பக் தரம் மற்றும் நேர்த்தியான ஒளிப்பதிவு.

• இடைவேளைக் காட்சியின் திருப்பங்கள் மற்றும் மிரட்டலான சண்டைக்காட்சிகள்.

• சுனில் மற்றும் ஆண்டனியின் அதிரடி நடிப்பு.

குறைகள்:

• படம் முழுவதும் கதாபாத்திரங்கள் சிகரெட் பிடித்துக்கொண்டு, ஸ்லோ மோஷனில் ஏதோ ஃபேஷன் ஷோ போல நடந்து வருவது சற்று அயர்ச்சியைத் தருகிறது.

• இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க பில்டப் மற்றும் சண்டைக்காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ளதால், திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது.

• எமோஷனல் காட்சிகள் எதிலும் ஆழம் இல்லாதது படத்திற்குப் பலவீனமாக அமைந்துள்ளது.

78
படக்குழுவின் முக்கிய வேண்டுகோள்!

படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான வேண்டுகோளை விடுத்துள்ளது. திரையரங்கில் படம் முடிந்து 'எண்ட் கார்டு' (End Card) போட்ட உடனே ரசிகர்கள் யாரும் அவசரமாக வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஏனெனில், இப்படத்தில் மொத்தம் மூன்று போஸ்ட் கிரெடிட் (Post-credit) காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் இரண்டு முக்கிய காட்சிகள் படத்தின் டைட்டில் கார்டுகள் ஓடிக்கொண்டிருக்கும் போதே வரும் என்றும், இறுதி மற்றும் மிக முக்கியமான காட்சி எண்ட் கார்டு முழுமையாக முடிந்த பிறகு திரையிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த இறுதி காட்சியில் படத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கான முக்கிய திருப்பங்களோ அல்லது 'காட்டாளன் பாகம்-2' (Sequel Part 2) திரைப்படத்திற்கான முக்கிய லீடோ (Hint) இருக்கலாம் என்பதால், ரசிகர்கள் இதைத் தவறவிடாமல் பார்க்கும்படி படக்குழுவினர் அன்போடு கேட்டுக்கொண்டுள்ளனர்.

88
மொத்தத்தில்...

தொழில்நுட்ப ரீதியாகவும், ஆக்ஷன் காட்சிகளிலும் மிரட்டியிருக்கும் இந்த 'காட்டாளன்', திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கலாம். 'ஜென் சி' (Gen Z) ரசிகர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்ட இந்த ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம், தியேட்டரில் எண்ட் கார்டுக்கு அப்புறமும் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸை வைத்துள்ளது!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories