கடந்த ஆண்டு தீபாவளி பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படமும், கார்த்தியின் ‘கைதி’ திரைப்படமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. வசூல் ரீதியாக ‘பிகில்’ திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்தது. அதேபோல் வசூல், விமர்சன ரீதியாக ‘கைதி’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
‘கைதி’ படத்தின் வெற்றியைப் பார்த்து தான் தளபதி விஜய் தன்னுடைய அடுத்த படத்திற்கு லோகேஷ் கனகராஜை ஓ.கே.செய்தார். தற்போது விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது.
இதேபோல் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘சுல்தான்’ படமும் பொங்கலுக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா முதன் முறையாக தமிழில் அறிமுகமாக உள்ளார்.
இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக மாஸ்டர் - சுல்தான் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் கார்த்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பு நிறுவனம் பொங்கல் ரேஸில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தது.
மாஸ்டர் படத்திற்கு அதிக அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டதால் கடுப்பான சுல்தான் பட தயாரிப்பாளர்கள் ஓடிடியில் வெளியிட உள்ளதாக வதந்தி பரவியது. ஆனால் அதை உண்மையில்லை என்றும், சுல்தான் திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் ரேஸில் இருந்து விலகிய சுல்தான் திரைப்படம் தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் கட்டாயம் தியேட்டரில் மட்டுமே படத்தை வெளியிட உள்ளதும் உறுதியாகியுள்ளதாம்.