
சூர்யா நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படமான கங்குவா, வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இதற்கு முன்னர் வரை குடும்ப செண்டிமெண்ட் கொண்ட அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கி வந்த சிவா, முதன்முறையாக வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக கங்குவாவை இயக்கி உள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானியும், வில்லனாக பாபி தியோலும் நடித்துள்ளனர். மேலும் நட்டி நட்ராஜ், கருணாஸ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதில் அனைத்து மொழிகளுக்குமே சூர்யாவின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்த உள்ளனர்.
இதையும் படியுங்கள்... பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் விடப்படும் கங்குவா! ஒர்த்தா; ஒர்த் இல்லையா? முதல் விமர்சனம் இதோ
கங்குவா படத்தின் ரிலீசுக்கு இன்னும் 3 வாரங்கள் உள்ள நிலையில், அப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன. முதற்கட்டமாக வட மாநிலங்களில் அப்படத்தின் புரமோஷனை தொடங்கிய சூர்யா, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அடுத்ததாக ஆந்திராவுக்கு வந்த அவர் அங்கு தெலுங்கு புரமோஷனில் கலந்துகொண்டார். இதுமட்டுமின்றி பாலகிருஷ்ணாவின் அன்ஸ்டாப்பபில் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
கங்குவா திரைப்படம் பாகுபலி ரேஞ்சுக்கும் இருக்கும் என கூறப்படுவதால் அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 2 ஆயிரம் கோடி வசூலிக்கும் என எதிர்பார்ப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவே கூறி இருந்தார். படம் பார்த்தவர்களும் படத்தை பற்றி பிரம்மித்து கூறி இருந்தார்கள். இந்த நிலையில் கங்குவா திரைப்படம் ரிலீசுக்கு முன்பே விஜய், ரஜினி படத்தின் சாதனை ஒன்றை முறியடித்து உள்ளது.
தெலுங்கு மாநிலங்களில் விஜய், ரஜினி போன்ற நடிகர்களுக்கு மவுசு அதிகம் இருக்கும். இதை கருத்தில் கொண்டு விஜய்யின் கோட் பட தெலுங்கு ரிலீஸ் உரிமை ரூ.17 கோடிக்கும், ரஜினியின் வேட்டையன் பட தெலுங்கு உரிமை ரூ.16 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இந்த இரண்டு படங்கள் தான் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் தெலுங்கு உரிமை அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட படமாகும். இதை முறியடிக்கும் விதமாக தற்போது கங்குவா படத்தின் தெலுங்கு உரிமை ரூ.25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கோட் மற்றும் வேட்டையன் பட சாதனையை கங்குவா படம் அசால்டாக முறியடித்து உள்ளது.
இதையும் படியுங்கள்... மீண்டும் மாஸ் இயக்குனருடன் "பார்ட் 2" கங்குவா ப்ரமோஷனில் சூர்யா கொடுத்த செம அப்டேட்!