Kamalhaasan Female Voice Songs : சினிமாவுக்காகவே தன்னை அர்ப்பணித்த நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் நடிப்பில் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமையாளராக வலம் வருகிறார். சிறுவயதில் இருந்தே நடித்து வரும் கமல், தமிழ் சினிமாவுக்கு பல்வேறு டெக்னாலஜிகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அண்மையில் கூட ஏஐ தொழில்நுட்பம் பற்றி படிக்க அமெரிக்காவிற்காவுக்கு சென்றிருந்தார். 70 வயதாகியும் அவரின் கலை தாகம் என்பது தீரவில்லை.
24
Kamalhaasan
குரலை மாற்றி பாடிய கமல்
சினிமாவில் பல்வேறு புதுமைகளை புகுத்துவதிலும் கமல் தொடர்ந்து முனைப்பு காட்டி வந்துள்ளார். இவருக்கு நடிப்புக்கு இணையாக இசையின் மீதும் ஆர்வம் அதிகம். குறிப்பாக இளையராஜாவும், கமல்ஹாசனும் இணைந்து இசையில் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள். கமல்ஹாசன் குரலில் வெளியான பெரும்பாலான பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. அந்த வகையில் கமல்ஹாசன் தன்னுடைய குரலை மாற்றி... அதாவது பெண் குரலில் பாடி ஹிட் கொடுத்த பாடல்கள் சில இருக்கின்றன. அதைப்பற்றி பார்க்கலாம்.
குரலை மாற்றி பாடுவதில் கில்லாடியாக இருந்த கமல், முதன்முதலில் பெண் குரலில் பாடியது அவ்வை சண்முகி படத்தில் தான். கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆன அப்படத்திற்கு தேவா இசையமைத்து இருந்தார். அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டான நிலையில், அதில் ருக்கு ருக்கு பாடலை சுஜாதா மோகன் உடன் இணைந்து பாடி இருந்தார் கமல்ஹாசன். அந்த பாடலில் அவ்வை ஷண்முகி கேரக்டர் பாடும்படி சில வரிகள் இருக்கும். அதற்காக தன்னுடைய குரலை மாற்றி லேடி வாய்ஸில் பாடி அசத்தி இருப்பார் கமல். அதில் ஆச்சர்யம் என்னவென்றால் குரலை மாற்றினாலும் சுருதி மிஸ் ஆகாமல் பாடி இருப்பார்.
44
Dasavatharam Movie Song
மூதாட்டி குரலில் பாடிய கமல்
அதேபோல் கமல்ஹாசன் பெண் குரலில் பாடிய மற்றொரு பாடல் தசாவதாரம் படத்தில் இடம்பெற்றது. இப்படத்தில் 10 வெவ்வேறு வேடங்களில் நடித்திருந்த கமல்ஹாசன், ஹிமேஷ் ரேஷ்மியா இசையில் முகுந்தா முகுந்தா பாடலை பாடி இருந்தார். சாதனா சர்கம் உடன் அவர் இணைந்து பாடிய இப்பாடலில் மூதாட்டி கெட்-அப்பில் வரும் கமல்ஹாசன் பாடுவது போல் சில வரிகள் இருக்கும். அந்த வரிகளை ஒரு மூதாட்டி பாடினால் எப்படி இருக்குமோ அதே போல் தத்ரூபமாக பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார் கமல்ஹாசன். இந்த இரண்டு பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், இந்த இரண்டு படங்களையும் கே.எஸ்.ரவிக்குமார் தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.