பிக்பாஸ் நிகழ்ச்சி என்றதுமே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது, நடிகர் கமல்ஹாசனின் முகம் தான். முதல் சீசனில் இருந்து தற்போது வரை இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறையாமல் கொண்டு செல்வதில் வல்லவராக இருக்கிறார்.
மக்களின் கருத்துகளையும், அவர்களது கேள்விகளையும்... நெற்றி பொட்டில் அடித்தது போல் பிக்பாஸ் போட்டியாளர்களிடம் எழுப்பி விளாசி வருபவர். அதே நேரம் எந்த இடத்தில் போட்டியாளரை விட்டுக்கொடுக்க கூடாது என்பதையும் நன்கு தெரிந்தவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய அரசியல் கருத்துகளையும் இவர் மறைமுகமாக எடுத்து வைத்து வருகிறார். கடந்த சீசனை விட இந்த சீசனில் அரசியல் கருத்துக்கள் சற்று குறைத்திருப்பதையும் பார்க்கமுடிகிறது.
இந்நிலையில் நேற்றைய தினம், இசை வாணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். எப்படியும் இறுதி போட்டிக்குள் அடியெடுத்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரத்தில் செய்த சில சிலுமிஷம் மற்றும் வீணாக பிரச்சனை வாங்கியதால் வெளியேறினார்.
இந்த வாரம் படு ஜோராக பிக்பாஸ் நிகழ்ச்சி சென்றாலும், அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொள்வாரா? என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
சற்று முன் கமல் தரப்பில் இருந்து வெளியான ஒரு அறிவிப்பில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். என கமல்ஹாசன் ட்விட் செய்துள்ளார்.
பொதுவாக கொரோனா தொற்று இருந்தால் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகியுள்ள நிலையில், கமல்ஹாசன்... அடுத்த வார நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? அல்லது அவருக்கு பதில் யாரேனும் கலந்து கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏற்கனவே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில காரணத்தால் நாகர்ஜுனா கலந்து கொள்ளாததால், ஆருக்கு பதில் அவருடைய மருமகளான சமந்தா தொகுத்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.