பிரம்மாண்டமாக ரீ-ரிலீசாகும் கமல்ஹாசனின் ஆளவந்தான்... ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிப்பு

First Published Jan 25, 2023, 3:01 PM IST

கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம் உலகமெங்கும் ஆயிரம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் தற்போது பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் டிரெண்ட் தொடர்ந்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி தோல்வியை தழுவிய பாபா திரைப்படம், டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டு, அதில் சில காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டு கடந்த மாதம் அவரின் பிறந்தநாளையொட்டி ரி-ரிலீஸ் செய்யப்பட்டது. புது படங்களுக்கு நிகராக இப்படம் வசூலித்து இருந்தது.

இந்நிலையில், கமல்ஹாசனின் ஆளவந்தான் திரைப்படம் தற்போது ரீ-ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் கடந்த 2001-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா தான் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு கமல்ஹாசன் திரைக்கதை அமைத்து இருந்தார். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் அந்த சமயத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இதையும் படியுங்கள்... ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு ரூ.25 லட்சம்... பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அசீம்

இப்படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி தற்போது அப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். இதற்கான அறிவிப்பையும் தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து போஸ்டர் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “விரைவில் திரையரங்கில் உங்கள் உள்ளங்களை ஆள வருகிறான்” என குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த படத்தை உலகமெங்கும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட உள்ளதையும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் ஆகும் தமிழ் படம் என்கிற சாதனையை ஆளவந்தான் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதையும் படியுங்கள்... எனக்கு நேர்ந்தது என் வீட்டிற்கு வரும் பெண்ணுக்கு நடக்க கூடாது! தி கிரேட் இந்தியன் கிச்சன் பட விழாவில் சுஹாசினி

click me!