தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து அந்த காலத்திலேயே பான் இந்தியா நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. கடந்த 2018-ம் ஆண்டு உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி அங்கு திடீரென மரணமடைந்தார். ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின் அவரது மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது அங்கு பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர், சென்னையில் தனது அம்மா வாங்கிய ஆடம்பர பங்களாவை சுற்றிக்காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகிறது. வீட்டு வாசலில் இருந்து அந்த வீடியோவை தொடங்கும், ஜான்வி, முதலில் தனது தந்தை போனி கபூரின் அலுவலகம் அந்த வீட்டில் செயல்பட்டு வருவதாக கூறி அதனை காட்டுகிறார்.
தனது தாய் திருமணமான பிறகு இந்த வீட்டை வாங்கியதாக கூறும் அவர், அந்த வீடு தனது தாயின் நினைவாக இருக்க வேண்டும் என்பதற்காக அதனை தனது தந்தை புதுப்பித்து உள்ளதாக ஜான்வி தெரிவித்துள்ளார். மேலும் நடிகை ஸ்ரீதேவி வரைந்த பல ஓவியங்கள் அந்த வீட்டில் இடம்பெற்றுள்ளதையும் ஜான்வி காட்டியுள்ளார்.
பின்னர் மாடியில் உள்ள தனது பொழுதுபோக்கு அறையை சுற்றிக்காட்டும் அவர், அங்கு தான் அதிக நேரத்தை செலவிடுவதாக கூறுகிறார். அதேபோல் அங்கு ரகசிய அறை ஒன்று இருப்பதை காட்டும் ஜான்வி, அந்த அறையில் என்ன இருக்கிறது என்று இதுவரை தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு மொட்டை மாடிக்கு செல்லும் ஜான்வி, அங்குள்ள தனது ஜிம்மைக் காட்டி, இதுதான் தனது சரணாலயம் எனக்கூறுகிறார். பின்னர் தானும், தனது சகோதரி குஷி கபூரும் வரைந்த ஓவியங்கள் அங்குள்ள சுவரில் வைக்கப்பட்டுள்ளதை சுற்றிக்காட்டும் ஜான்வி, தனது தாயாரால் தங்களுக்கும் இந்த ஆர்வம் வந்ததாக கூறுகிறார்.